×

கடலில் காவிரி நீர் கலக்கும் கொடியம்பாளையம் தீவு சுற்றுலா தலம் ஆகுமா?

புவனகிரி: கர்நாடக மாநிலத்தின் குடகு மலையில் உருவாகும்  காவிரி ஆறு, திருச்சி அருகே கொள்ளிடம் ஆறாக பிரிகிறது. இந்த கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கும் இடம்தான் கொடியம்பாளையம் கிராமம். வங்கக் கடலோரத்தில் நாகை, கடலூர் மாவட்ட எல்லையில் உள்ள அழகிய கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஹோ.... என்ற இரைச்சல் சத்தத்துடன் ஆர்ப்பரிக்கும் கடல் சத்தத்தை நாள் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.  இந்த கிராமத்தை  சுற்றிலும் ஓடி கடலில் கலக்கும் ஆறுகள், ஓடைகள் என இயற்கை எழில் சூழ்ந்து காணப்படுகிறது கொடியம்பாளையம் கிராமம்.

முகத்துவார பகுதியில் ஏராளமாக சுரபுன்னை மரங்கள் வளர்ந்து இயற்கை எழில் கொஞ்சும் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. மிகவும் நீளமான கடற்கரை கொண்ட கிராமம் உண்மையிலே பூலோக சொர்க்கம்தான். கொடியம்பாளையம் கிராமத்தின் இருபுறமும் 17 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்டு செல்லும் கடற்கரை இயற்கை விரும்பிகளை வியக்க வைக்கிறது. தமிழகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய கடற்கரை சுற்றுலா தலங்களில் மிகவும் ரம்மியமானது. கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து  தினமும் ஆடிப்பாடி, விளையாடி கடலில் குளித்து மகிழ்கின்றனர். இப்படியிருந்தும்  பெரிய அளவில் சுற்றுலா தலம் பிரபலமாகவில்லை என்பது பெரிய குறையாக உள்ளது. நாகை மாவட்ட எல்லையில் இந்த கிராமம்  இருந்தாலும், இந்த மக்கள் நிலப்பரப்பின் வழியாக கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நகரத்துக்கு தினமும் வந்து செல்கின்றனர்.

கொடியம்பாளையம் கிராமத்திலிருந்து நாகை மாவட்டம் செல்ல வேண்டுமானால் ஆற்றில் படகு மூலம் செல்ல வேண்டும்.  ஆனால் தரைவழி மார்க்கமாக சிதம்பரம் செல்வதற்கு நேரடி பஸ் வசதி இருக்கிறது. கொடியம்பாளையம் கடற்கரையை ஒரு மிகச்சிறந்த சுற்றுலா தலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.  இதற்கான பூர்வாங்க பணிகள் எதுவும் துவக்கப்படாமல் இருப்பது  கிராமத்து மக்களின் குறையாக உள்ளது.

கொடியம்பாளையம் கிராமத்தின் தலைவர் ராமசாமி கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாகவே  கொடியம்பாளையம் கிராமத்தை சுற்றுலாத் தலமாக்க அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகளை அனுப்பி  வருகிறோம். கடல் நீரும் ஆற்றின் நீரும் சேரும் இடத்தில் சுரபுன்னை மரங்களுடன் இயற்கை அழகோடு இந்த கிராமம் காட்சியளிக்கிறது. இதை சுற்றுலா தலமாக்க வேண்டும் என்பதற்காகவே வனத்துறையிடம் காடு வளர்ப்பு பணிகளை செய்யக் கூடாது எனகூறி திட்டத்தையே தடுத்து நிறுத்தி இருக்கிறோம் என்றார்.

இதே கிராமத்தை சேர்ந்த பாண்டியன் கூறுகையில், இயற்கை எழில் சூழ்ந்து காணப்படுவதால் இங்கு ஏராளமானோர் தினமும் பொழுதுபோக்குக்காக வருகின்றனர்.  நல்ல குடிநீர், படகு குழாம், படகு இல்லம், கடற்கரை வரை செல்வதற்கு வசதியாக தடுப்புச் சுவருடன் கூடிய சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். இதனால் அரசுக்கு நல்ல வருவாயும் கிடைக்கும். நீர்  விளையாட்டுகளுக்கு ஏற்ற நிலத்தகவமைப்புடன் இருப்பதால், கோவாவை போன்று பல்வேறு சுற்றுலா திட்டங்களை கொண்டுவரலாம். கிராமமும் வளர்ச்சி அடையும் என்றார்.

அகோரமூர்த்தி கூறுகையில், பஸ். சாலை, போக்குவரத்து, ஓட்டல்கள், பூங்கா, சிறுவர் விளையாட்டு உபகரணம் போன்ற அனைத்து வசதிகளையும் செய்து விட்டு இந்த கிராமத்தை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும். அருகில் உள்ள பிச்சாவரத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். ஆனால் அங்கு வனப்பகுதி மட்டுமே உள்ளது. கடற்கரைப் பகுதி இல்லை. அதனால் கொடியம்பாளையத்தை சுற்றுலா தலமாக ஆக்கினால் படகில் சுரபுன்னை காட்டுப் பகுதிகளுக்குச் சென்று விட்டு, கடற்கரையில் ஓய்வெடுக்கும் வகையில் இந்த இடத்தை மாற்றி அமைக்கலாம், தங்கும் விடுதிகள், சுகாதாரமான குடிநீர், ரெஸ்டாரண்டுகள் என அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றார்.  பெரிய அளவில் சுற்றுலா தலம் பிரபலமாகவில்லை என்பது பெரிய குறையாக உள்ளது.

Tags : Kodiyampalayam Island ,Sea ,Cauvery Water ,Cane Kodiyampalayam Island , Can Kodiyampalayam Island Mixing Cauvery Water in the Sea Becomes an Importance?
× RELATED காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 95வது...