* சோளிங்கர், மாமல்லபுரத்தில் இருந்து கட்டுமான பொருட்கள் * அரைக்க காங்கேயம் காளைகள் * பாரம்பரிய கட்டிட கலை நிபுணர் தகவல்
சென்னை: ஹூமாயூன் மகால் புனரமைப்பு பணிக்காக பண்டைய கால கட்டுமான கலவையை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக 2 காங்கேயம் காளைகள், பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட சுண்ணாம்பு மற்றும் கற்களை கொண்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பண்டைய கால தமிழர்களின் அடையாளத்தை இன்றைக்கும் எடுத்துகாட்டுவது நமது கட்டிட கலை முக்கிய பங்கு வகிக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன் கலை நயத்துடன் கட்டப்பட்ட கட்டிடங்கள் இன்றளவும் புராதன சின்னங்களாக விளங்கி வருகின்றன. அதில், சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள கல்சா மகால், ஹூமாயூன் மகால் உள்ளிட்ட நூற்றாண்டு பழமையான கட்டிடங்கள், சென்னை பல்கலை செனட் கட்டிடம் உள்ளிட்ட கட்டிடங்கள் மிகவும் முக்கியமானவை ஆகும். இந்த பழமை வாய்ந்த கட்டிடங்களை பாதுகாக்க பொதுப்பணித்துறையில் பாரம்பரிய கட்டிட பாதுகாப்பு கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ேகாட்டம் மூலம் பழமை மாறாமல் அதே தரத்துடன் பாரம்பரிய கட்டிடங்களை புனரமைக்கப்படுகிறது.
இருப்பினும் சுண்ணாம்பு கலவை மட்டும் கலவை இயந்திரத்தின் மூலம் அரைக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த இயந்திரத்தில் அரைத்து தயாரிக்கப்படும் கலவை அந்த அளவை பூச்சுக்கு உகந்ததாக இல்லை. எனவே, அன்றைய காலகட்டத்தில் உள்ளது போன்று சுண்ணாம்பு பூச்சு கலவை சுண்ணாம்பு ரோதை மூலம் தயாரிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பண்டைய காலமுறையை நடைமுறைப்படுத்த வேண்டி சுண்ணாம்பு ரோதை தயாரிக்கும் முறையை பொதுப்பணித்துறையின் பாரம்பரிய கோட்ட பொறியாளர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அதன் பண்டைய கால தயாரிக்கும் முறையையும் பயன்படுத்திய உபகரணங்களை கண்டறிந்தனர். இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய கால அளவு மற்றும் தன்மை அடிப்படையாக கொண்டு பொதுப்பணித்துறை சேப்பாக்கம் வளாகத்தில் உள்ள பாரம்பரியமிக்க கட்டிடங்களை புதுப்பிக்க அதே சுண்ணாம்பு கலவை தயாரிக்க பயன்படும் ரோதைக்கல் வைத்து இரண்டு மாடுகள் உதவியுடன் அரைக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. இவ்வாறு அரைக்கப்படும் சுண்ணாம்பு கலவை ஹூமாயூன் மகால் புனரமைப்பு பணிக்கு பயன்படுத்தப்படுகிறது.
இது குறித்து பொதுப்பணித்துறை பாரம்பரிய கட்டிட கண்காணிப்பு பொறியாளர் கல்யாணசுந்தரம் கூறியதாவது:வேலூர் மாவட்டம் சோளிங்கரில் இருந்து ரோதைக்கல் தயாரித்து வரவழைக்கப்பட்டது. சுற்று வட்டத்தில் வைக்கப்பட்ட கருங்கற்கள் மகாபலிபுரத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டு வரவழைக்கப்பட்டது. இப்பணிக்கென்று பழக்கப்பட்ட இளம் காங்கேயம் காளை வகையை சேர்ந்த 2 மாடுகள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து வரவழைக்கப்பட்டது. ஒரு நாளைக்கு சுமார் 20 சுற்றுகளுக்கு 5 மூட்டை சுண்ணாம்பு கலவை தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் பாரம்பரியமிக்க சுண்ணாம்பு கலவை பூச்சு முறை இந்தியாவிலேயே தமிழகத்தில் தான். இந்த முறை மூலம் தயாரிக்கப்படும் சுண்ணாம்பு கலவையை தான் பழைமை வாய்ந்த ஹூமாயூன் மகால் புனரமைக்கும் பணிக்கு பயன்படுத்தப்படுகிறது. பாரம்பரிய கட்டிடத்தை பல ஆண்டுகளுக்கு முன் பின்பற்றப்பட்ட அதே பாரம்பரிய முறையில் சுண்ணாம்பு பூச்சு கலவை தயாரிக்கும் முறையை பின்பற்ற வேண்டும் என்கிற அடிப்படையில் இப்பணிக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 300 ஆண்டுகளுக்கு இந்த கட்டிடத்தில் பூச்சு நிலைத்து நிற்கும். இவ்வாறு அவர் கூறினார்.
பாரம்பரிய கட்டிட நிபுணர் பரமசிவம் கூறுகையில், பல ஆண்டுகளுக்கு முன்பு காளை மாடுகள் உதவியுடன் ரோதைக்கல் பயன்படுத்தி சுண்ணாம்பு கலவை அரைக்கப்பட்டது. தற்போது மீண்டும் இது ேபான்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த முறையில் தயாரிக்கப்படும் சுண்ணாம்பு கலவை 15 நாட்கள் கடுக்காய், வெல்லம், முட்டை, சோற்றுக்கற்றாழை போட்டு ஊற வைத்து அதன்பிறகு பூச்சுக்கும், மேற்கூரை போடுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இது போன்று தயாரிக்கப்படும் சுண்ணாம்பு கலவை 100 சதவீதம் தரமானதாக இருக்கும்’ என்றார்.