×

சென்னை சேப்பாக்கத்தில் தீ விபத்தால் சேதமடைந்த ஹுமாயூன் மஹால் புனரமைக்கும் பணியை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு: ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை: சென்னை, சேப்பாக்கத்தில் சுமார் 250 ஆண்டுகள் பழமை வரலாற்று புகழ் வாய்ந்த ‘ஹுமாயூன் மஹால்’ கட்டிடம் வாலாஜா சாலையில் அமைந்துள்ளது. 2005ம் ஆண்டு முதல் கட்டிடம் வலுவிழந்ததால், பராமரிப்பு கைவிடப்பட்டது. 2012ம் ஆண்டு தீ விபத்தில் பாதிக்கப்பட்டு கீழ்த்தளம் முற்றிலும் எரிந்து விழுந்த நிலையிலும், முதல்தள கூரைகள் இடிந்து மிகவும் மோசமான நிலையிலும், மரங்கள் மற்றும் செடிகள் வளர்ந்து பாழடைந்து இருந்தது.வரலாற்று சிறப்பு மிகுந்த தமிழ்நாட்டின் பாரம்பரிய கட்டடங்களை பாதுகாத்து புனரமைப்பு செய்யும் பொருட்டு, நீதிபதி பத்மநாபன் தலைமையில் 2007ல் ஏற்படுத்தப்பட்ட குழுவினரால், ஹுமாயூன் மஹால் கட்டடம் முதல்வகை புராதான கட்டிடமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இக்கட்டடத்தினை புனரமைப்பு செய்து மறுசீரமைத்திட தமிழக அரசால், ரூ.41.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. இக்கட்டிடத்தின் முகப்பில் மேற்குப்புறம் முன்று பெரிய குவிமாடம், உயர் கோபுரம், உயர் வளைவு நுழைவு வாயில் மற்றும் உள்ளார்ந்த வேலைபாடுகளுடன் கூடிய தேக்கு மரத்தினால் ஆன மரப்படிகள் நான்கு புறமும் அமைந்துள்ளது. இக்கட்டிடத்தின் தரைத் தளத்தில் 9 நீண்ட பொது அறைகள் மற்றும் முதல்தளத்தில் 4 பொது அறைகள் மற்றும் நான்கு புறமும் நடைபாதை தாழ்வாரங்கள் மற்றும் முதல் தளத்தில் திறந்தவெளியில் நான்கு புறமும் சீமை ஓடுகளுடன் கூடிய சாய்தளக்கூரை அமைக்கப்பட்டுள்ளது. 2ம் தளத்தில் ஒரு பொது அறை சீமை ஓடுகளால் வேயப்பட்ட சாய்தளக்கூரையுடன் அமைந்துள்ளது. இக்கட்டிடத்தில் தரை மற்றும் முதல் தளத்தில் மொத்தம் 108 எண்ணிக்கையிலான இரண்டு தட்டு அடுக்கு மிகப்பெரிய தேக்கு மரக்கதவுகள் ஒரு அடுக்கு லூவர்டு கதவும் மற்றொரு அடுக்கு கண்ணாடியினால் ஆன கதவுமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கட்டிடத்தில் செங்கற்கள் மற்றும் கருங்கற்களால் ஆன வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது, 85 விழுக்காடு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள்  துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு 31.08.2022-ற்குள் அனைத்து பணிகளையும் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து எ.வ.வேலு அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டில் பாரம்பரிய மற்றும் புராதான பழமை வாய்ந்த கட்டிடங்கள் பொதுப்பணித்துறையின் மேற்பார்வையில் 85 கட்டிடங்கள் உள்ளன.  அதில், முதல் கட்டமாக 35 கட்டிடங்கள் சுமார் ரூ.150 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு வருகிறது” என்றார். ஆய்வின் போது பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, பொதுப்பணித்துறை, தலைமைப் பொறியாளர் எம்.விஸ்வநாத், கண்காணிப்புப் பொறியாளர் எம்.வாசுதேவன் ஆகியோர் உடனிருந்தனர்….

The post சென்னை சேப்பாக்கத்தில் தீ விபத்தால் சேதமடைந்த ஹுமாயூன் மஹால் புனரமைக்கும் பணியை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு: ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Humayun Mahal ,Chepauk, Chennai ,VELU ,Chennai ,Chennai, Chepaukam ,Walaja Road ,Chepakkam ,Minister ,A. Etb. Velu ,
× RELATED கரிவலம்வந்தநல்லூர் அருகே...