இலங்கை அதிபர் தேர்தல்: பொதுஜன பெரமுனா கட்சியின் கோத்தபய ராஜபக்ச 6,924,255 வாக்குகள் பெற்று வெற்றி

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தாய ராஜபக்ச வெற்றிப்பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கையில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அதிபர் தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இலங்கை அதிபர் தேர்தலில் இவ்வளவு பேர் போட்டியிட்டது இதுவே முதல் முறை. ஆனால், தற்போது பதவியில் உள்ள இலங்கை அதிபரோ, பிரதமரோ அல்லது எதிர்கட்சி தலைவரோ யாரும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தம்பியான கோத்தபய ராஜபக்சே(70), அந்த  நாட்டின் பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவர் விடுதலைப் புலிகளுடன் போர் நடந்தபோது ராணுவ அமைச்சராக இருந்தவர் என்பதால், இலங்கைக்கு மிகவும் பாதுகாப்பனவராக கருதப்படுகிறார்.

ஆளும் ஐக்கிய தேசிய கட்சி (யுஎன்பி) சார்பில் சஜீத் பிரேமதாசா (52) போட்டியிடுகிறார். இவர் இலங்கையில் கடந்த 1989ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரை அதிபராக இருந்த ரணசிங்கே பிரேமதாசாவின் மகன். ரணசிங்கே விடுதலைப் புலிகளால் கடந்த 1993ம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார். தேசிய மக்கள் சக்தி(என்பிபி) கட்சியின் அனுரா குமார திசநாயகேவும் 3வது முக்கிய வேட்பாளராக உள்ளார். அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது. இதற்காக, நாடு முழுவதும் 12,845 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 1 கோடியே 59 லட்சம் வாக்காளர்கள் இந்த தேர்தலில் ஓட்டுப்போட தகுதி பெற்றிருந்தனர். தேர்தல் பணியில் 4 லட்சம் அரசு அதிகாரிளும், 60 ஆயிரம் போலீசாரும், பாதுகாப்பு படையினர் 8 ஆயிரம் பேரும் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஐரோப்பிய யூனியன் தேர்தல் பார்வையாளர்களும் அதிபர் தேர்தலை கண்காணித்தனர். பலத்த பாதுகாப்புக்கு இடையே தேர்தல் நடந்தாலும், பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இலங்கையில் நேற்று 100க்கும் மேற்பட்ட இடங்களில் வன்முறை நடந்துள்ளது. இலங்கையில் அதிபரை தேர்வு செய்வதில், சிறுபான்மையினரான தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் ஓட்டுக்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. பல இடங்களில் மழை பெய்தாலும், அதையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களித்தனர். வாக்குப்பதிவு நேற்று மாலை 5 மணியுடன்  நிறைவடைந்தது. நேற்று வாக்குப்பதிவு முடிந்தவுடன் ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது.

இந்நிலையில் இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தாய ராஜபக்ச வெற்றிப்பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்தலில் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர் கோத்தாய ராஜபக்ச 69,24,255 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இலங்கை ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச 55,64,233 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார் என கூறியுள்ளது.

Related Stories:

>