×

குழந்தைகள் தினம் 2019: இந்தியாவை சேர்ந்த 7 வயது சிறுமி தீட்டிய ஓவியத்தை டூடுளாக அலங்கரித்துள்ள கூகுள்!

புதுடெல்லி: இந்தியாவை சேர்ந்த பள்ளி மாணவி தீட்டிய ஓவியத்தை, கூகுள் தேடுபொறி தனது டூடுள் பக்கத்தில் அலங்கரித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவாக நவம்பர் 14 குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. குழந்தை தொழிலாளர்கள் இல்லாமல், அனைத்து குழந்தைகளும் அடிப்படை கல்வி பெற்று முழு பாதுகாப்புடன் அனைத்து உரிமைகளையும் பெற வேண்டும் என்பதே குழந்தைகள் தின விழாவின் நோக்கமாக உள்ளது. உலகின் பல்வேறு அமைப்புக்களும் நாடுகளும் வெவ்வேறு நாட்களில் குழந்தைகள் தினத்தை கொண்டாடி வருகின்றன. இந்நிலையில், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 131வது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக கூகுள் சிறப்பு டூடுளை உருவாக்கியுள்ளது.

நேரு பிறந்தநாளான குழந்தைகள் தினத்தை ஒட்டி, கூகுள் நடத்திய போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 1000க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பங்கேற்றனர். அவர்களில் குர்கானை சேர்ந்த திவ்யான்ஷி சிங்கால் என்ற 7 வயது மாணவி வரைந்த ஓவியம் டூடுளாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளின் எதிர்காலம் இயற்கையோடு பயணிக்க வேண்டும். இதற்கு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த ஓவியத்தை சிறுமி வரைந்திருந்தார். நான் வளரும்போது, இயற்கையுடன் பயணிப்பேன் என நம்புகிறேன் என்று குழந்தைகளின் நம்பிக்கையே இந்த வருட கருப்பொருளாகும். 


Tags : Google , Children’s Day, sketch , Doodle, Google
× RELATED தவறான தகவல் பரவுவதை தடுக்க தேர்தல் கமிஷனுடன் கைகோர்த்தது கூகுள்