×

வடகிழக்கு பருவமழை 17ம் தேதி முதல் கொட்டிய நிலையில் தமிழகத்தில் 18 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைவு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சென்னை: வடகிழக்கு பருவமழை 17ம் தேதி முதல் கொட்டிய நிலையில் தமிழகத்தில் 18 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து தான் உள்ளது என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 17ம் தேதி தொடங்கி மாநிலம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது.

இந்த மழை காரணமாக, குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்கு முக்கிய நீர்ஆதாரமாக விளங்கும் 15 அணைகளில் 8 அணைகளில் நீர் மட்டம் கொள்ளளவை எட்டியது. அதே போன்று 14098 ஏரிகளில் 1891 ஏரிகள் முழு கொள்ளளவையும், 2,300 ஏரிகள் 90 சதவீதம் வரை கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த மழை காரணமாக, நிலத்தடி நீர் மட்டமும் மாநிலம் முழுவதும் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 13 மாவட்டங்களில் மட்டுமே உயர்ந்து இருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக மாநில நில மற்றும் நீர் வள ஆதார விவர குறிப்பு மையம் ஆய்வு மேற்கொண்டது. 3,238 பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் 1,480 ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் ஆய்வு செய்யப்ட்டது. தமிழகத்தில் அந்தந்த பகுதிகளில் சேகரிக்கப்பட்ட நீர் அளவு, நீர்வள ஆதாரத்துறை மூலம் கணக்கிடப்பட்டது.

இவ்வாறு கடந்த மாதம் நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை ஒப்பிடுகையில் தமிழகம் முழுவதும் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், சேலம், ஈரோடு, கோவை, ராமநாதபுரம் ஆகிய 13 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம், நாகை, கரூர், நாமக்கல், திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 18 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காலகட்டமான டிசம்பர் 31ம் தேதிவரை சராசரி அளவு பெய்யும் பட்சத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : districts ,Tamil Nadu ,North East , Ground Water Levels Decrease in 18 Districts of Tamil Nadu
× RELATED தமிழ்நாட்டில் நேற்று 16 மாவட்டங்களில்...