×

புற்றுநோயை துல்லியமாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க மதுரை அரசு மருத்துவமனையில் 10 கோடியில் பெட்-சிடி ஸ்கேன்: முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்

சென்னை: புற்றுநோயை துல்லியமாக கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.10 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள பெட்-சிடி ஸ்கேன் கருவி சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று  தலைமை செயலகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தார்.மேலும், திருப்பூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு மைய கட்டிடம், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு மற்றும் ஓசூர் அரசு மருத்துவமனையில்  ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் அவசர சிகிச்சை அறுவை அரங்கம், சிதம்பரம், காரைக்குடி அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் அவசர சிகிச்சை அறுவை அரங்கங்கள், நாமக்கல் மற்றும்  திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மைய கட்டிடங்கள், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிறப்பு பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவுக் கட்டிடம்  மற்றும் கடலூர், தர்மபுரி, திருநெல்வேலி, தேனி, திருச்சி, விழுப்புரம் மாவட்டம் என மொத்தம் ரூ.30 கோடியே 49 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு அரசு மருத்துவ  கல்லூரி வளாகத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.96 கோடியே 31 லட்சம் மதிப்பீட்டில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மைய கட்டிடத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அச்சமின்றி பணியாற்றும் வகையில், முதல்கட்டமாக 80 அரசு மருத்துவமனைகளில் உடனடி உதவி தொலைபேசி வசதிகளை நிறுவிட முடிவு செய்யப்பட்டு,  திருவள்ளூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் தாம்பரம் அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள உடனடி உதவி தொலைபேசி சேவையை முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Madurai Government Hospital , accurately , cancer, Madurai Government ,Hospital , Crores
× RELATED வைகையாறு செல்கிறதா கழிவுநீர்… மதுரை...