×

கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத வகையில் தீபாவளிக்கு தங்கவிற்பனை 30% சரிவு: அதிர்ச்சி தகவல்: பணப்புழக்கம் குறைந்ததால் மக்கள் மனம் மாறியது: சங்க தலைவர் பேட்டி

சென்னை: தமிழகத்தில் கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத வகையில் தீபாவளிக்கு தங்கம் விற்பனை 30 சதவீதம் குறைந்துள்ளது. பணம் புழக்கம் இல்லாததால் மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தீபாவளிக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் கிடைக்கிறது. இதனால், தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வந்தனர். சென்னையைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்னதாகவே பொருட்கள் வாங்குவது தொடங்கிவிடும். தங்க நகைகளை பொறுத்தவரை 10 நாட்களுக்கு முன்பு தொடங்கும் விற்பனை, தீபாவளியன்று பிற்பகல் வரை விற்பனை நடைபெறும். எப்போதும் கூட்டமும் நிறைந்து காணப்படும். ஆனால் இந்த ஆண்டு விற்பனை பெரிய அளவில் நடைபெறவில்லை. கூட்டமும் குறைவாக காணப்பட்டது. தீபாவளியன்று நகைக்கடைகள் அனைத்தும் திறந்திருந்தன. ஆனால் கடைகளில் நகை வாங்கத்தான் ஆட்கள் இல்லை.

தங்க நகை விற்பனை குறித்து மெட்ராஸ் தங்க நகை, வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: கடந்த ஆண்டு தங்க நகை விற்பனையை விட இந்த ஆண்டு 30 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது. இதற்கு காரணம், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 5 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. மேலும் மக்களிடம் பணப்புழக்கம் முற்றிலும் குறைந்து விட்டது. ஜிஎஸ்டி மற்றும் வேலை இழப்புகளால் இந்த பணப்புழக்கம் குறைந்துள்ளது. இந்த இரு காரணங்களால் விற்பனை குறைந்து விட்டது. தமிழகத்தில் மட்டுமல்லாது, நாடு முழுவதும் இதேநிலைதான் நீடித்தது.

பொருட்களை எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம். ஏன் தீபாவளி முடிந்த பிறகு கூட வாங்கலாம். தீபாவளியன்று ஒரு ஓட்டலுக்கு சாப்பிட முடியாவிட்டால் கூட அடுத்த வாரத்தில் சாப்பிடலாம். ஆனால் முக்கியமான நாட்களில் நகை வாங்குவது நல்லது என்று கருதி மக்கள் தங்கம் தாங்குவதை தள்ளிப்போடுவதில்லை. ஆனாலும், விற்பனை குறைந்துள்ளது. நான், கடந்த 35 ஆண்டுகளாக தங்க நகை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளேன். இந்த 35 ஆண்டுகளில் இப்போதுதான் முதல் முறையாக 30 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது.இவ்வாறு ஜெயந்திலால் சலானி கூறினார்.

Tags : Diwali , In the past 35 years, gold sales for Diwali have fallen by 30%
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...