×

பிரதமர் மோடி- ஜின் பிங் மாமல்லபுரத்தில் சந்திப்பு சென்னையில் ரயில் சேவைகள் சில மணி நேரம் நிறுத்தம்

* பலத்த சோதனைக்கு பின்பே பயணிகள் அனுமதி

சென்னை:  பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின் பிங் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசியதையொட்டி, வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், சென்னையில் ரயில் சேவைகள் சில மணி நேரம் நிறுத்தப்பட்டது. மேலும் ரயில் நிலையங்களில் பயணிகள் அனைவரும் பலத்த சோதனைகளுக்கு பின்பே அனுமதிக்கப்பட்டனர். சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு நேற்று மற்றும் இன்று நடைபெறுகிறது. இரு தலைவர்களும் மாமல்லபுரம் மற்றும் கோவளம் அருகே நட்சத்திர விடுதியில் சந்தித்துப் பேசவுள்ளனர். இதற்காக சீன அதிபர் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னை வந்தார். இதையொட்டி சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அவருக்கு தமிழ் கலாச்சாரத்துடன் கூடிய சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா 7 நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்பு மாலை 4 மணியளவில் கிண்டியில் இருந்து புறப்பட்டு மாமல்லபுரத்துக்கு சாலை மார்க்கமாக புறப்பட்டு சென்றார். அங்கு அர்ஜுனன் தபசு பகுதியில் சீன அதிபரை பிரதமர் மோடி வரவேற்றார். மாமல்லபுரத்தில் கோயில்கள் மற்றும் தொன்மை வாய்ந்த சிற்பங்களை பார்த்து ரசித்துவிட்டு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளையும் இருவரும் கண்டுகளித்தனர்.

இந்நிலையில், சீன அதிபரின் வருகையை முன்னிட்டு சென்னை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வான்வழி, நீர்வழி, சாலை மார்க்கமாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் நீர்மூழ்கி உட்பட 3 ஆயுதம் தாங்கிய கப்பல்கள் கடலில் நிறுத்தி வைக்‍கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. சென்னை மற்றும் காஞ்சிபுரம் மீனவர்கள் 3 நாட்களுக்‍கு கடலுக்‍குள் செல்ல தடை விதிக்‍கப்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சீன அதிபர் விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கிண்டியில் உள்ள ஓட்டலுக்கு சென்றார். அதேபோன்று மாலை மாமல்லபுரத்துக்கும் சாலை மார்க்கமாக சென்றார். இதனால் தாம்பரம் முதல் சின்னமலை வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.  அதேபோன்று ரயில்களும், அவர் சென்னை விமான நிலையம் வந்தடைந்ததிலிருந்து, மாமல்லபுரம் புறப்பட்டு செல்லும் வரை கிண்டி வழித்தடத்தில் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள், விரைவு எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் சில மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டது. விரைவு ரயில்கள், மின்சார ரயில்கள் பல்லாவரம் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. மெட்ரோ ரயில்கள் சின்னமலை ரயில் நிலையத்துடன் நிறுத்தப்பட்டது.

மேலும் அனைத்து ரயில் நிலையங்களிலும் விமான நிலையத்துக்குள் எப்படி கடும் சோதனைக்கு பின்பே பயணிகள் அனுமதிக்கப்படுவார்களோ, அதேபோன்று ரயில் நிலையங்கள் முன்பு போலீசார் தற்காலிக சோதனை சாவடிகளை அமைத்து கடும் சோதனைக்கு பின்பே பயணிகளை அனுமதித்தனர். குறிப்பாக ராஜிவ்காந்தி சாலை மார்கமாக சீன அதிபர் மாமல்புரம் சென்றதால் அந்த வழித்தடத்தில் உள்ள பறக்கும் ரயில் நிலையங்கள் அனைத்தும் போலீசாரின் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று இன்று காலை 9 மணிக்கு கிண்டியில் இருந்து ஜின்பிங் சாலை வழியாக கோவளம் செல்கிறார். அங்கு பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். பின்னர் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மதியம் 1 மணி அளவில் தனிவிமானம் மூலம் நேபாளம் புறப்பட்டு செல்கிறார். எனவே இன்று காலை முதல் மதியம் வரை ஜின் பிங் புறப்படும் வரை கிண்டி முதல் மாமல்லபுரம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதுடன் ரயில் சேவைகளும் நிறுத்தி வைக்கப்படுகிறது. பயணிகள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னே அனுமதிக்கப்படுவார்கள் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

வெறிச்சோடிய சாலைகள்

சீன அதிபர் கிண்டியிலிருந்து மாமல்லபுரத்துக்கு சாலை மார்க்கமாக செல்லவிருப்பதால் சென்னை முழுவதும் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது. ஆட்டோக்கள், கன ரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள் ஓட அனுமதி மறுக்கப்பட்டது. பெருங்களத்தூரில் இருந்து வாகனங்கள் சென்னைக்குள் வர தடை விதிக்கப்பட்டது. இதனால் சென்னை மாநகர சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் முற்றிலுமாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் எந்தவித வாகனங்களும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

ஐடி நிறுவனங்கள் மூடல்

மாமல்லபுரம் செல்லும் வழி குறிப்பாக ஓஎம்ஆர், ராஜிவ்காந்தி சாலை வழியாக இருப்பதால் அங்கு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் துறை கடந்த சில நாட்களுக்கு முன்பே முறையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் ஐடி நிறுவன ஊழியர்கள் இந்த பகுதிக்குள் வரமுடியாத நிலை ஏற்பட்டது. இதை உணர்ந்த ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீடுகளில் இருந்த பணியாற்ற அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஐடி நிறுவன பகுதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

Tags : Mamallapuram ,Modi-Jin Bing Meets ,Mamallapuram: Train Services Chennai Stop , Prime Minister Modi-Jin Bing meets , Mamallapuram,Train services,Chennai stop
× RELATED மாமல்லபுரம் இசிஆர் சாலையில்...