×

மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலை விபத்தில் 2 பேர் பலி ஆட்டோ ரேஸில் ஈடுபட்ட டிரைவர்கள் உள்பட 7 பேர் கைது: ஆட்டோக்கள் பறிமுதல்

சென்னை, ஜூன் 20: மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலையில் விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவத்தில், ஆட்டோ ரேஸில் ஈடுபட்ட டிரைவர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், 3 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலையில் அவ்வப்போது இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் சாகசங்களில் ஈடுபடுவதும், பைக் ரேஸ் செல்வதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், கடந்த 15ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அருமந்தை பகுதியில் அதிகாலை நேரத்தில் முன்னால் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மீது 3 இருசக்கர வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதின. இந்த விபத்தில் குன்றத்தூரை சேர்ந்த மணி, அம்பத்தூரை சேர்ந்த ஷாம்சுந்தர் ஆகியோர் உயிரிழந்தனர். இதில், பெசன்ட் நகரை சேர்ந்த மோகனகிருஷ்ணன், கண்ணகி நகரை சேர்ந்த மாரிமுத்து, பூந்தமல்லியை சேர்ந்த ஜுபேயர் ஆகிய மூவர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், ஆட்டோ ரேஸ் நடந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது தொடர்பான வீடியோ வெளியான நிலையில் வழக்கின் பிரிவுகளை மாற்றி செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். செல்போன் வீடியோ காட்சிகள், கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் ஆட்டோ ரேஸில் ஈடுபட்ட 5 ஆட்டோ டிரைவர்கள் உள்பட 7 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
முகப்பேரை சேர்ந்த சந்துரு (38), கொளத்தூரை சேர்ந்த மதி (43), ரமேஷ் (32), ஜாய்சன் (31), பெரம்பூரை சேர்ந்த ராஜசேகர் (35), ஆவடியை சேர்ந்த கவுதம் (24), அண்ணா நகரை சேர்ந்த பிரேம்குமார் (33) உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும், 3 ஆட்டோக்களையும் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து, தடை உத்தரவை மீறி பைக், ஆட்டோ ரேஸில் ஈடுபடுதல் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

The post மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலை விபத்தில் 2 பேர் பலி ஆட்டோ ரேஸில் ஈடுபட்ட டிரைவர்கள் உள்பட 7 பேர் கைது: ஆட்டோக்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Meenjur ,Vandalur ,outer ring road ,Chennai ,Meenjoor-Vandalur ,Meenjoor ,-Vandalur outer ,Dinakaran ,
× RELATED வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல்...