×

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் அக்.18ம் தேதி டெல்லியில் நடக்கும்: பெங்களூரு கூட்டத்தில் முடிவு

பெங்களூரு: காவிரி  ஒழுங்காற்று குழுவின் 17வது ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் நவீன்குமார்  தலைமையில் பெங்களூரு நீர்ப்பாசனத்துறை அலுவலகத்தில் நேற்று நடந்தது.  தமிழகம் சார்பில் பொதுப்பணித்துறை தலைமை  இன்ஜினியர் ராமமூர்த்தி,  புதுச்சேரி சார்பில் அந்த மாநிலத்தின் பொதுப்பணித்துறை தலைமை இன்ஜினியர்  மகாலிங்கம், கேரளா சார்பில் அம்மாநிலத்தின் பொதுப்பணித்துறை அதிகாரிகள் என 4  மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகள் இந்த  கூட்டத்தில் கலந்து கொண்டனர்.காலை  11 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில்  கர்நாடகாவில் இருந்து தமிழகம்,  கேரளா, புதுச்சேரிக்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரின் அளவு மற்றும் காவிரி  நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள  அணைகளுக்கு நீர்  வரத்து உள்பட பல்வேறு  முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டது. இதுகுறித்து  பத்திரிக்கையாளர்களுக்கு  பேட்டியளித்த காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைவர்  நவீன்குமார் கூறியதாவது:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஆகஸ்ட்  மாதம் முதல் அக்டோபர் மாதம் 9ம் தேதி வரை பெய்த மழையின் அளவு, அதன் மூலம்  அணைக்கு வந்த நீர், அந்த காலக்கட்டத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதி  அணைகளில் இருந்த நீர் இருப்பு,  தமிழகம், புதுச்சேரி, கேரளாவிற்கு  திறக்கப்பட்ட நீரின் அளவு ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும்  காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதம்  வரையிலான நீரின் அளவு குறித்த கர்நாடகா  கொடுத்த அறிக்கையுடன் கேரளா,  புதுச்சேரி, தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் அளித்த அறிக்கைகள் ஒப்பிட்டு  பார்க்கப்பட்டது. அதில் மழை பொழிவிற்கு ஏற்ப 4 மாநிலத்திற்கு தண்ணீர்  திறந்து விடப்பட்டிருப்பதாக அந்தந்த மாநில  நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள்  உறுதி செய்துள்ளனர். மேகதாது விவகாரம் தொடர்பாக இந்த கூட்டத்தில்  எந்த விவாதமோ, ஆலோசனையோ நடத்தவில்லை. காவிரி  மேலாண்மை ஆணையத்தின் ஒழுங்காற்று குழுவின் அடுத்த கூட்டம்  வரும் 18ம் தேதி  டெல்லியில் நடைபெறும்.இவ்வாறு நவீன்குமார் கூறினார்.



Tags : Cauvery Disciplinary Committee Meeting ,Delhi , Cauvery Disciplinary Committee Meeting, Bengaluru
× RELATED நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி போலீஸ் மனு