×

வாக்குப்பதிவு நடைபெறும் சில மணி நேரத்திற்கு முன் கர்நாடக பாஜ வேட்பாளரிடம் ரூ.4.8 கோடி பறிமுதல்

பெங்களூரு: கர்நாடகாவில் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு சில மணி நேரத்திற்கு முன் பாஜ வேட்பாளர் சுதாகரிடம் இருந்து ரூ.4.8 கோடியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, முதல்கட்டமாக உடுப்பி-சிக்கமகளூரு, ஹாசன், மங்களூரு, சிக்கபள்ளாபுரா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில், சிக்கபள்ளாபுரா தொகுதியில் பாஜ சார்பில் சுதாகர் போட்டியிடுகிறார். வாக்குப்பதிவு தொடங்கும் சில மணி நேரத்திற்கு முன்பு பாஜ வேட்பாளர் சுதாகரிடம் பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் இருந்து ரூ.4.8 கோடியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து மதநாயக்கனஹள்ளி காவல் நிலையத்தில் அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் பாஜ வேட்பாளர் சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாக்குப்பதிவின்போது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க ரூ.4.8 கோடி பணத்தை சுதாகர் கொண்டு சென்றதாக பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன் பாஜ வேட்பாளரிடம் இருந்து ரூ.4.8 கோடி பறிமுதல் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு கர்நாடகா முழுவதும் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், மதுபானம், போதைப்பொருள், விலைமதிப்பற்ற உலோகங்கள், பரிசுப் பொருட்கள் போன்றவற்றை தேர்தல் ஆணையர் பறிமுதல் செய்துள்ளார்.

 

The post வாக்குப்பதிவு நடைபெறும் சில மணி நேரத்திற்கு முன் கர்நாடக பாஜ வேட்பாளரிடம் ரூ.4.8 கோடி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : KARNATAKA BAJA ,BANGALORE ,SUDHAKAR ,KARNATAKA ,Udupi-sikkamakaluru ,BJP ,Dinakaran ,
× RELATED கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர்...