ஒருவர் பசியோடு வீட்டு வாசலில் நிற்கிறார். அவரை நாம் ஏளனமாக பார்த்து, ‘‘ஒன்றும் இல்லை’’ என விரட்டி அடிக்கிறோம். ஆனால், ஓரிடத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர், முக்கிய தினங்களில் லட்சக்கணக்கானோர் உணவருந்தி செல்கின்றனர். அதுதான் கடலூர் மாவட்டம், வடலூரில் உள்ள வள்ளலார் கோயிலில் உள்ள தர்ம சாலை. அதற்கு முக்கிய காரணம் வள்ளலார் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே மருதூரில் ராமையா, சின்னம்மை தம்பதிக்கு ஐந்தாவது மகனாக பிறந்தவர் ராமலிங்கம். இவர் பிறந்த ஆறாவது மாதத்தில் தந்தை ராமையா காலமானார். சின்னம்மை, தன் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் கருதி சென்னைக்கு வந்து சேர்ந்தார்.
மூத்த மகன் சபாபதி, காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதியிடம் கல்வி பயின்றார். புராண சொற்பொழிவில் வல்லவரானார். சொற்பொழிவுகளுக்குச் சென்று வருவதன் மூலம் கிடைக்கும் பொருளை வைத்துக் குடும்பம் நடத்தி வந்தனர்.
அவருக்கு ஒருமுறை உடல்நலம் பாதிக்கப்பட்டதால், சொற்பொழிவுக்குச் செல்ல முடியவில்லை. எனவே அவர், தம்பி ராமலிங்கத்திடம் சொற்பொழிவு நடக்க உள்ள இடத்துக்குச் சென்று, சில பாடல்களைப் பாடி, தான் வர முடியாத குறையைத் தீர்த்து விட்டு வருமாறு கூறினார். அதன்படி ராமலிங்கம் அங்கு சென்றார்.
அன்று சபாபதியின் சொற்பொழிவைக் கேட்க ஏராளமானோர் திரண்டிருந்தனர். அண்ணன் சொன்னபடியே சில பாடல்களை மனமுருக பாடினார் ராமலிங்கம். இதன்பின், அவரிடம் ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்துமாறு அங்கு கூடியிருந்தோர் வெகுநேரம் வற்புறுத்தினர். தன் முதல் சொற்பொழிவை அவர் முதன்முறையாக அரங்கேற்றினார். அப்போது அவருக்கு வயது என்ன தெரியுமா? ஒன்பது தான். பலரது வற்புறுத்தலுக்கு இணங்க, ராமலிங்கம் தன் 27வது வயதில் திருமணத்துக்குச் சம்மதித்தார். அவர் சகோதரி உண்ணாமுலையின் மகள் தனக்கோடியைத் திருமணம் செய்து கொண்டார். மண வாழ்க்கையில் இருந்தாலும் சமூக சேவையில் ஆர்வம் காட்டினார். அது மட்டுமல்ல.... ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்டவாசகம் ஆகிய நூல்களையும் எழுதினார். இவர் பாடல்கள் அனைத்தும் திருவருட்பா என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.
சமரச சன்மார்க்க நெறியை வழங்கினார். அனைத்து மத நல்லிணக்கத்திற்காக சன்மார்க்க சங்கத்தையும், பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க அறச்சாலையையும் அமைத்தவர். அறிவுநெறி விளங்க ஞானசபையையும் நிறுவியவர்.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் இவருடையது. யாரும் பசியால் வாடக்கூடாது என்பதில் மிகவும் தீர்க்கமாக இருந்தார். அவர் 30.1.1874ல் இறப்பதற்கு முன் அவர் கூறிய வார்த்தைகள் இவைதான்...
‘‘யாரும் பசியால் வாடக்கூடாது. வடலூர் தர்மசாலையில் ஏற்றப்படும் அடுப்பு எரிந்து கொண்டே இருக்க வேண்டும்.
உணவை வறியோருக்கு அளித்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்த அடுப்பு அணைந்தால் அன்று உலகம் அழிவது போல. எனவே, அணையால் மற்றவர்களின் பசியாற்றுங்கள்’’ என்று கூறி மறைந்தாராம். 1874ம் ஆண்டு அவரது இறப்பு முதல் தற்போது வரை அந்த அடுப்பு அணையாமல் எரிந்துக் கொண்டே இருக்கிறது. நாமும் நம்மால் முடிந்தவரை, வறியவர்களின் பசியினை போக்க சிறு உதவி செய்து மகிழ்வோம்.
