×

தேர்தல் பணிக்கு செல்லாத காங்கிரஸ் நிர்வாகிகள் கணக்கெடுப்பு

சென்னை: தமிழகத்தை பொறுத்தவரை சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்கள் எதையும் சந்திக்காத நிலையில், தற்போது நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு இந்த  தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதால் ஆளுங்கட்சியான அதிமுக வேட்பாளரை எதிர்த்து காங்கிரஸ் தனது பலத்தை காட்ட வேண்டியுள்ளது. இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியினரின் கை எப்போதும் ஓங்கி இருக்கும்.  ஆனால் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் நடந்த வேலூர் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. இதனால் தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற  இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், கூட்டணியான காங்கிரஸ் நாங்குநேரியிலும் தங்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் தொகுதி மக்கள் மத்தியில் தீவிர பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

 நாங்குநேரி தொகுதியை பொறுத்தவரை ஆளுங்கட்சி சார்பில் தென்மாவட்ட அமைச்சர்கள் முதல் மாவட்ட செயலாளர்கள் என ஒரு பெரிய டீம் இறக்கப்பட்டுள்ளது. இவர்களை எதிர்த்து காங்கிரசும் தங்கள் பலத்தை காட்ட காங்கிரஸ் தலைமை  உத்தரவிட்டுள்ளது. இதனால் கே.எஸ்.அழகிரி கட்சியின் மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள் நாங்குநேரி தொகுதியை முற்றுகையிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார்.  ஏற்கனவே ப.சிதம்பரம் கைதை கண்டித்து நடந்த போராட்டங்களில் கே.எஸ்.அழகிரிக்கு ஒத்துழைக்கு கொடுக்காமல் போனது போல இடைத்தேர்தலிலும் அதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதில் அதிரடி வியூகங்களை  வகுத்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முன்னாள், இன்னாள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் நாங்குநேரி தொகுதிக்கு படையெடுத்து செல்லும் வகையில் தனது  நடவடிக்கைகளை தொடங்கியுள்ளார்.

 இடைத்தேர்தலுக்கு ஒத்துழைக்காத முக்கிய நிர்வாகிகளை கணக்கெடுத்து களையெடுக்கும் திட்டம் தான் அது. யாரெல்லாம் இடைத்தேர்தல் பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கி இருக்கிறார்களோ அவர்களின் பட்டியலை தயார் செய்யவும்  உத்தரவிட்டுள்ளார். அவர்களின் பட்டியலை மேலிடத்துக்கு தெரிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரசார் மத்தியில் பேசப்படுகிறது.  இதனால் இப்போதே பல முக்கிய நிர்வாகிகள் நாங்குநேரி தொகுதிக்கு தேர்தல் பணிக்கு செல்ல திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. கே.எஸ்.அழகிரியின் இந்த அதிரடி பிளான் காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : administrators ,election , Election Work, Congress Executives
× RELATED சீசனுக்கு ஏற்றமாதிரி புதுசு புதுசா...