×

சிமென்ட் கலவையை கொட்டி நாய் உயிரோடு சமாதி : மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம்

சென்னை: மாநகராட்சி சார்பில் கோட்டூர்புரத்தில் நடக்கும் மழைநீர் கால்வாய் பணியின்போது சாலையோரம் நாய் படுத்திருந்ததை கண்டுகொள்ளாமல் அதன் மீது சிமென்ட் கலவை கொட்டி உயிரோடு சமாதி வைத்த மாநகராட்சி அதிகாரிகளின்  செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகே மற்றும் கோட்டூர்புரம் காவல் நிலையம் எதிரே மழைநீர் கால்வாய் கட்டும் பணி மாநகராட்சி அதிகாரிகள் சார்பில் நடந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை இரவு மழைநீர்  கால்வாயின் மேல் பரப்பில் சிமென்ட் கலவையால் தளம் அமைக்கும் பணிகள் நடந்தது. அப்போது சாலையோரம் ஒரு நாய் படுத்திருந்தது. இதை கவனிக்காமல் இயந்திரம் மூலம் சிமென்ட் கலவையை நாய் மீது கொட்டி கால்வாயை  அமைத்துவிட்டு ஊழியர்கள் சென்றுள்ளனர். இதில் சிக்கிய நாய் உயிர் தப்ப பல்வேறு வகையில்  போராடியது. சிமென்ட் இறுகிவிட்டதால் அந்த இடத்தில் இருந்து நாயால் தப்ப முடியவில்லை.இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சென்ைனயில் கன மழை பெய்ததால் சிமென்ட் கலவையில் சிக்கி இருந்த காலை வெளியே எடுக்க முடியாமல் தவித்து ஒரு கட்டத்தில்  நாய் உயிரை விட்டுள்ளது. அதாவது அதிகாரிகளின் அலட்சியத்தால்  சிமென்ட் கலவையால் நாய்க்கு உயிருடன் சமாதியை மாநகராட்சி அதிகாரிகள் வைத்துள்ளனர்.
மறுநாள் காலை அப்பகுதி மக்கள் நடைபயிற்சி மேற்கொண்டபோது சிமென்ட் கலவையுடன் நாய் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், புளூ கிராஸ் அமைப்புக்கு தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து புளூ கிராஸ் மேலாளர் டான் வில்லியம் ஊழியர்களுடன் வந்து சிமென்ட் கலவையை உடைத்து நாயின் சடலத்தை மீட்டனர். பிறகு, டான் வில்லியம் மாநகராட்சி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி  கோட்டூர்புரம்  காவல் நிலையத்தில் புகாரளித்தார்.போலீசார் அப்பகுதி சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது நாய் சாலையை கடக்கும்போது ஆட்டோ ஒன்றில் அடிபட்டு சாலையோரம் படுத்திருந்தது தெரிய வந்தது. அப்போது, கால்வாய் பணி நடந்ததால் நாயை கவனிக்காமல் உயிருடன் இருந்த  நாய் மீது சிமென்ட் கலவையை கொட்டி கால்வாய் அமைத்து விட்டு  சென்றது விசாரணையில் தெரியவந்தது.அதை தொடர்ந்து போலீசார் முதற்கட்டமாக அடையாளம் தெரியாத நபர்கள் என விலங்குகளுக்கான கொடுமைகளை தடுக்கும் சட்டம் 1990, 11(1)(ஏ) மற்றும் ஐபிசி 429, 278 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாயின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் சிமென்ட் கலவை கொட்டியதில் நாய் உயிரிழந்ததா என தெரியவரும். அதன் பிறகே  சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : Dog ,corporation officials , Pour, cement , dog , ,Municipal ,neglect
× RELATED நியூயார்க்கில் நடைபெற்ற வெஸ்ட்மின்ஸ்டர் நாய் கண்காட்சி..!!