×

புறக்கணிக்கப்பட்ட கிராமத்தில் கும்ப கலச மரியாதையுடன் பாஜ எம்பிக்கு வரவேற்பு

பெங்களூரு: தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக கர்நாடகாவில் சித்ரதுர்கா தொகுதி பாஜ எம்பி நாராயணசாமியை கிராமத்திற்குள் நுழையவிடாமல் விரட்டிய அதே கிராம மக்கள் நேற்று கும்ப கலச மரியாதையுடன்  அவரை வரவேற்றனர்.
கர்நாடகாவின் சித்ரதுர்கா மக்களவை தொகுதி உறுப்பினராக இருப்பவர் ஏ.நாராயணசாமி. தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரான இவர் கடந்த 17ம் தேதி தனது தொகுதிக்கு உட்பட்ட பென்னனஹள்ளி கொல்லரஹட்டி கிராம மக்கள் குறைகளை  கேட்பதற்காக சென்றார். எம்.பி.யை எல்லையிலேயே தடுத்து நிறுத்திய அந்த கிராம முதியவர்கள், ‘‘எங்கள் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த யாரையும் அனுமதிப்பதில்லை.

இதை காலம், காலமாக பின்பற்றி வருவதால் உங்களை  அனுமதிக்க முடியாது’’ என்று  கூறினர்.இதனால் எம்.பி. ஏமாற்றத்துடன் திரும்பினார். இது பரபரப்பான செய்தியானது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அதே கிராமத்திற்கு முருக ராஜேந்திர மடத்தின் மடாதிபதி வந்து, தீண்டாமை அடியோடு ஒழிய வேண்டும் என்று  கிராமத்தினருக்கு அறிவுறுத்தினார். அவரின் ஆலோசனையை ஏற்றுக்கொண்ட கிராமத்தினர் மீண்டும் எம்பியை சந்தித்து தங்கள் கிராமத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். அதையேற்று நேற்று பகல் அந்த கிராமத்திற்கு நாராயணசாமி  வந்தார். அப்போது கிராம மக்கள் கூடி எல்லையில் கும்ப கலச மரியாதையுடன் அவரை வரவேற்று அழைத்துச் சென்றனர்.


Tags : Baja ,village ,Kumbala Kala ,Kumbha Kalasa , neglected ,village, Welcome, Baja MP
× RELATED பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில்...