×

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கந்து வட்டிக்காரர்களிடம் சிக்கிய ‘அன்றாடங்காய்ச்சிகள்’

* மைக்ரோ பைனான்ஸ்களிடம் சீரழியும் மகளிர் சுயஉதவி குழுக்கள்

சென்னை: திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கந்து வட்டிக்காரர்களிடம் அன்றாடங்காய்ச்சிகளும், மைக்ரோ பைனான்ஸ்களிடம் மகளிர் சுயஉதவி குழுக்களும் சிக்கித் தவிக்கின்றன. இதனால், பலர் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தள்ளுவண்டி வியாபாரிகளும், கூடைகளில் பழம் விற்கும் வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள் போன்ற அன்றாடங்காய்ச்சிகளை வங்கிகள் மனிதர்களாகவே மதிப்பது இல்லை. எனவே அவர்கள் வட்டிக்கு விடும் தனியார்களை அணுக வேண்டியவர்களாக உள்ளனர். ஒரு கால கட்டம் வரை இரண்டு வட்டி, மூன்று வட்டிக்கு பணம் தந்து கொண்டிருந்தார்கள். அதில் வட்டி மட்டுமே பெரும்பாலும் திரும்புவதற்கான சாத்தியங்களே தென்பட்டன.எனவே வட்டிக்கு விடுபவர்கள் கொடுக்கல் வாங்களுக்கான நடைமுறையை மாற்றினர். தின வசூலுக்கு மாறினர். அதாவது 8,750யை தருவார்கள். தினமும் 100 வீதம் 100 நாட்களில் 10 ஆயிரம் திரும்பக் கட்ட வேண்டும். ஒன்றிரண்டு நாட்கள் தவறுகிற பட்சத்தில் அபராதம் தீட்டியவர்கள் ஏராளம். இது நல்ல வருவாயைத் தரவே இன்னும் ஆசைப்படத் தொடங்கினார்கள். வடிவத்தை மாற்றினார்கள். கந்து வட்டி பிறப்பெடுத்தது. பைனான்ஸ்காரர்கள் கந்துக்காரர்கள் ஆனார்கள்.

இப்போது காலையில் 900 தருவார்கள். அதை வியாபாரிகள் எடுத்துக் கொண்டு போய் மார்க்கெட்டில் பழங்களோ, வேறு எதுவோ வாங்கி வந்து நாள் பூராவும் வெயிலென்றும் பாராமல், மழை என்றும் பாராமல் விற்று மாலையில் 1000ம் ஆக தர வேண்டும். ஒருகட்டம் வரைதான் இதில் இவர்கள் திருப்திப்பட்டார்கள். பிறகு அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்தார்கள். காலையில் 750 தருவார்கள். மாலையில் 1000 தரவேண்டும். இது மீட்டர் வட்டி என்றழைக்கப்பட்டது. பிறகு இது கிலோமீட்டர் வட்டி என்று நகர்ந்தது. இப்போது காலையில் 500 தருவார்கள். மாலையில் 1000ம் ஆக தர வேண்டும்.
இதுதான் தற்போது திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் நடந்து வருகிறது. ஒரு கூடை வியாபாரி காலையில் 500 வாங்கி பொருளாக்கி விற்று மாலைக்குள் மீட்டர் கந்துக்காரருக்கு 1000 அழுது மிச்சத்தில் குடும்பத்தின் வயிறுகளைக் கழுவ வேண்டும். இவற்றை சாத்தியப்படுத்த வேண்டுமெனில் இவர் தனது வாடிக்கையாளர்களிடம் வழிப்பறிக் கொள்ளைக்காரனைப்போல நடந்து கொள்ள வேண்டும். 10 மதிப்புள்ள பொருளை ₹30க்கு விற்றால்தான் இது ஓரளவிற்கு சாத்தியம். இதே வியாபாரத்தை சொந்தப் பணத்தில் செய்கிற ஒருவர், 12க்கு அதை விற்க முடியும் எனில், இவரது வியாபாரம் படுத்துவிடும். அப்படிப் படுத்துவிடுகிற பட்சத்தில் இவரால் வாங்கிய கடனை அடைக்க முடியாது.

அதன்பிறகுதான் கந்து வட்டியின் கொடுமை புரிய வருகிறது. உச்சகட்டமாக குடும்பத்தோடு தற்கொலைகள் என்பதுவரை அது இன்றளவும் நீண்டு கொண்டுதான் இருக்கிறது. நான்கு வயிறுகளை கழுவுவதற்கு திருடாமல், பிச்சை எடுக்காமல் சம்பாதிக்க நினைக்கும் ஒருவர் கந்து வட்டியில் விழும்போது அதன் விலை நான்கு உயிர்கள் என்றாகிறது. சமீப காலமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், சில நிறுவனங்கள் மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் அலுவலகங்கள் அமைத்து, கந்து வட்டி தொழிலை துவக்கி உள்ளன. ஏற்கனவே செயல்படும் மகளிர் குழு உறுப்பினர்களை இந்நிறுவனங்களின் பிரதிநிதிகள் சந்திக்கின்றனர்.‘’புதிய ஆட்களை வைத்து, புதிய குழுக்களை துவக்கினால் உடனுக்குடன் கடன் தருகிறோம். ஒரு உறுப்பினருக்கு 10 ஆயிரம் கிடைக்கும். மாதம் 640 வீதம் 20 மாதங்களுக்கு திருப்பி செலுத்த வேண்டும். அதாவது, 10 ஆயிரம் பெற்று, 12,500 திருப்பி செலுத்த வேண்டி வரும். குறைந்த வட்டிக்கு இவ்வளவு பணம் கிடைக்காது என ஆசை வார்த்தை கூறுகின்றனர். கடன் பெற 12 பேருக்கு ஒருவரை குழு தலைவியாக தேர்ந்தெடுக்கின்றனர். 10 ஆயிரம் தரும்போதே ஆவணச் செலவு எனக் கூறி 750 எடுக்கின்றனர். குழு தலைவியின் வீட்டுக்கு அனைத்து உறுப்பினர்களையும் வரச்சொல்லி, உடனுக்குடன் பணக் கட்டுகளை பட்டுவாடா செய்கின்றனர்.

மாதாமாதம் உறுப்பினர் தவணைத் தொகையை செலுத்த தவறினால், குழு தலைவி தான் பொறுப்பு. பணம் செலுத்தாதவர்களுக்கு அனைத்து விதமான இம்சைகளும் தேடி வரும். பயந்து தாலியை விற்று கூட கடனை அடைக்கும் நிலைக்கு பலர் தள்ளப்படுகின்றனர். சமீபகாலமாக இது போன்ற நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, கந்துவட்டி கும்பலாக செயல்படும் மைக்ரோ பைனான்ஸ்களின் ஆதிக்கத்தையும் ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அழியும் சுயஉதவி குழுக்கள்

1986ல் உலக வங்கி உள்ளிட்ட பன்னாட்டு நிதி நிறுவனங்கள், வளரும் நாடுகளிலுள்ள மக்களை ஏழ்மை மற்றும் வட்டிக் கடன் கொடுமைகளில் இருந்து மீட்க சுயஉதவிக் குழுக்களின் செயல்பாட்டை ஆதரிக்கத் துவங்கின. ‘’நபார்டு’’ வங்கியின் மூலம், மத்திய அரசு சுய உதவிக் குழுக்களை ஆதரிக்கத் துவங்கியதன் தொடர்ச்சியாக, 1989ல் திமுக அரசால் தமிழகத்தில் இது முன் மாதிரித் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. பன்னாட்டு வளர்ச்சி நிதியுதவியுடன் 8 மாவட்டங்களில் 75 ஒன்றியங்களில் மட்டும் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், பின்னர் மாநிலம் முழுவதும் அபரிமிதமான வளர்ச்சியை எட்டியது. தமிழகம் முழுவதும் 40 லட்சத்துக்கும் அதிகமான பெண்களை உறுப்பினர்களாக் கொண்ட, நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட குழுக்கள் இயங்கின.

முந்தைய திமுக ஆட்சியில், சுயஉதவிக் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஒரு கோடியாக உயர்த்தும் நோக்கத்தில், திருநங்கைகள், பாலியல் தொழிலாளர்கள், மாற்றுத் திறனாளிகள் என விளிம்பு நிலை மக்களுக்கான குழுக்கள் உருவாக்கப்பட்டன. இது சமூக ஆர்வலர்கள் இடையே பலத்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கடந்த 7 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் மைக்ரோ பைனான்ஸ் புற்றீசல்கள் போல் தமிழகம் முழுக்க முளைத்தன. இதன் செயல்பாடுகள்தான், சுய உதவிக் குழு என்னும் பெயரைக் கேட்டாலே ‘’சூடு பட்ட பூனை’’களாக பெண்கள் ஒதுங்கக் காரணமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags : Chengalpattu ,Kanchipuram , Thiruvalur, Kanchipuram , Chengalpattu Districts
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் அஞ்சல்துறை...