×

பக்தர்கள் முயற்சியால் நடவடிக்கை குளித்தலை அய்யர்மலையில் 3 சுனைகள் தூர் வாரும் பணி

குளித்தலை : பக்தர்கள் முயற்சியால் குளித்தலை அய்யர்மலையில் 3 சுனைகளை தூர் வாரும் பணி துவங்கி உள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர்மலையில் சிவ தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ரத்தினகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் 1017 அடி உயர மலை உச்சியில் அமைந்து உள்ளது. இக்கோயிலில் கார்த்திகை மாதம் சோமவாரம் வெகு சிறப்பாக நடைபெறும். இதேபோல் சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெறும். இத்தனை சிறப்புவாய்ந்த கோயில் மலை உச்சியில் அம்மன் கோயில் பின்புறம் தென்பகுதியில் மிகப்பெரிய சுனை ஒன்றும், அடிவாரத்திலிருந்து மேல் செல்லும் வழியில் சிறிய சுனைகள் இரண்டும் உள்ளன.

மலை உச்சியில் உள்ள மிகப்பழமை வாய்ந்த சுனையில் இருந்து தான் அக்காலத்தில் சிவாச்சாரியார்கள் மூன்றுவேளை பூஜைக்காக தீர்த்தம் எடுத்து சென்று உள்ளனர். ஆனால் தற்போது மலையிலுள்ள மூன்று சுனைகளும் வற்றிப் போன நிலையில் தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. மழையின்றி வானமும் பொய்த்ததால் சுற்றுப்புற வட்டாரத்தில் விவசாய நிலங்கள் காய்ந்து போய் கிடக்கின்றன.

இந்நிலையில் என்றுமே வற்றாத சுனைகளை தூர்வார நடவடிக்கை எடுத்தால் இப்பகுதியில் மழை பெய்யும் என்ற எண்ணத்தில் அப்பகுதி பக்தர்களான வேப்பங்குடி அண்ணாதுரை, அய்யர்மலை சண்முகம், கிராமியம் நாராயணன் ஆகியோர் முயற்சியில் அய்யர் மலையில் உள்ள 3 பிரசித்தி பெற்ற சுனை களை தூர்வார நடவடிக்கை எடுத்து வருகின்றனர். முதற்கட்டமாக செயல் அலுவலர் ராமமூர்த்தி முன்னிலையில் மலை உச்சியில் உள்ள சுனையை. தூர்வாரும் பணியை தொடங்கி உள்ளனர். இதனால் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் இப்பகுதி பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

Tags : kulithalai,Devotees ,water ponds,iyermalai
× RELATED திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில்...