சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு காண்டாமிருகம் கொண்டு வரப்பட்டுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு 30 ஆண்டுகளுக்கு பின்பு காண்டாமிருகம் கொண்டு வரப்பட்டுள்ளதகால் பொதுமக்கள் அதை காண மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர். வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏற்கனவே இருந்த காண்டாமிருகம் கடந்த 1989-ம் ஆண்டு இறந்துவிட்டது.
அதற்கு பிறகு 30 ஆண்டுகளாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் காண்டாமிருகம் இல்லை. இந்நிலையில் தற்போது அஸ்ஸாம் மாநிலம் காசிரங்கா தேசியப் பூங்காவில் இருந்து 4 வயது ஆண் காண்டாமிருகம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நேற்று இரவு டிரக் மூலம் இந்த காண்டாமிருகம் கொண்டு வரப்பட்டது.
அந்த ஆண் காண்டாமிருகத்தை விலங்கியல் மருத்துவர்கள் தனியான ஒரு இடத்தில் வைத்து கண்காணித்து வருகின்றனர். மேலும் இன்றும் சில மாதங்களில் இதற்குத் துணையாக மற்றொரு பெண் காண்டாமிருகம் வரவிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். அந்த பெண் காண்டாமிருகம் வந்த உடன், இரண்டு காண்டாமிருகத்தையும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது என வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
