×

கோரிக்கைகளை வலியுறுத்தி போராடலாம் சட்டத்தை கையில் எடுக்க முடியாது : எம்சிடி பணியாளர்களுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

புதுடெல்லி: சம்பளம் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாநகராட்சி துப்புரவு ஊழியர்களுக்கும்  தொழிற்சங்கங்களுக்கும் உரிமை  உண்டு. ஆனால், அவர்கள் பிரச்னையை உருவாக்கவோ அல்லது சாலைகளில் குப்பைகளை கொட்டி மற்றவர்களை பணிக்கு வரவிடாமல் தடுப்பதையோ ஏற்க முடியாது என உயர் நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது. கிழக்கு மாநகராட்சியின் துப்பரவு பணியாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து மார்ச் மாதத்தில் வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு சபாய் கரமாச்சாரி சங்கம் அழைப்பு விடுத்தது. அதன்பேரில் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட துப்பரவு பணியாளர்கள் குப்பைகளை சாலையில் கொட்டி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.இந்நிலையில், துப்பரவு பணியாளர்களின் இந்த ஸ்டிரைக் காரணமாக அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதாகவும், பணிக்கு வர விரும்புவோரையும் துப்பரவு பணியாளர்கள் சங்கம் தடுப்பதாகவும் கூறி கிழக்கு மாநகராட்சி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், கிழக்கு டெல்லி மாநகராட்சி தனது கடமைகளை நிறைவேற்ற எந்த தடையும் இல்லாமல் இருப்பதை  உறுதிப்படுத்த டெல்லி காவல்துறை மற்றும் டெல்லி அரசுக்கு உத்தரவிடுமாறு தெரிவித்து இருந்தது.  இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் துப்பரவு பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, நேற்று இந்த வழக்கு நீதிபதிகள் விபின் சாங்காய் மற்றும் ரேகா பல்லி அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது,  கிழக்கு மாநகராட்சியின் சார்பில் ஆஜரான வக்கீல் சதுர்வேதி, ஊழியர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக மாநகராட்சியால் மண்டல  மற்றும் தலைமை அலுவலக  மட்டத்தில் ஒரு நிரந்தர குறை தீர்க்கும் மையத்தை அமைத்துள்ளதாக நீதிமன்றத்திற்கு தெரிவித்தார். மேலும், கடந்த மார்ச் 31ம் தேதி வரை நிலுவை தொகை உட்பட அனைத்து சம்பள பாக்கியும் வழங்கப்பட்டு விட்டதாகவும், இதனால்,  நீதிமன்றத்தின் கடந்த மார்ச் 4  உத்தரவுக்குப் பின்னர் தொழிற்சங்கங்களால் எந்த வேலைநிறுத்தமும் போராட்டமும்  நடத்தப்படவில்லை என தெரிவித்தார். இதையடுத்து, நிதிமனறத்தின் உத்தரவின் பேரில்,  துப்பரவு பணியாளர்கள் சங்க தலைவர் மற்றும் செயலாளர் இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது, இருவரும் எதிர்வரும் காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என்றும் உறுதியளித்தனர். அதன்பின் உத்தரவிட்ட நீதிபதிகள், மாநகராட்சி பணியாளர்கள் சட்டத்துக்கு உட்பட்டு தங்களது உரிமைகளுக்காக குரல் எழுப்ப முழு உண்டு. ஆனால், சாலைகளில் குப்பைகளை கொட்டி மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சட்டம் ஒழுங்கை கையில் எடுப்பதை அனுமதிக்க முடியாது. இதுபோன்ற செயல்கள் நடக்குமாயின் நீதிமன்றம் தனது இரும்புக்கரத்தை நீட்டும் என எச்சரிக்கப்படுகிறது என்றனர். …

The post கோரிக்கைகளை வலியுறுத்தி போராடலாம் சட்டத்தை கையில் எடுக்க முடியாது : எம்சிடி பணியாளர்களுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : iCord ,MCD ,New Delhi ,iCourt ,
× RELATED ககன்யான் திட்டத்தில் அடுத்த...