×

பீகார் மாஜி முதல்வரான லாலுவுக்கு கண் அறுவை சிகிச்சை வெற்றி

 

புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சித் தலைவரான லாலு பிரசாத் யாதவ், டெல்லியில் நடைபெற்ற கண் அறுவை சிகிச்சைக்குப் பிறகு நலமுடன் வீடு திரும்பினார். பீகார் மாநில முன்னாள் முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டு வருகிறார்.

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளியே உள்ள இவர், கடந்த 2014ம் ஆண்டு இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதனைத் தொடர்ந்து, உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிங்கப்பூரில் அவருக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், 77 வயதான லாலு பிரசாத் யாதவ் கண்புரை மற்றும் விழித்திரை கோளாறு காரணமாக டெல்லியில் உள்ள பிரபலமான கண் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவ நிபுணர் மகிபால் சிங் சச்தேவ் தலைமையிலான மருத்துவக் குழுவினர், நவீனத் தொழில்நுட்ப உதவியுடன் அவருக்குச் சிகிச்சையளித்தனர்.

இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, அன்றைய தினமே அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். தற்போது அவர் டெல்லியில் உள்ள தனது வீட்டில் மருத்துவர்களின் அறிவுரைப்படி ஓய்வெடுத்து வருகிறார். இதுகுறித்து அவரது மகள் மிசா பாரதி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கடவுளின் அருளால் எனது தந்தைக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது’ என்று குறிப்பிட்டு மருத்துவக் குழுவினருக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

 

Tags : Former ,Bihar ,Chief Minister ,Lalu ,New Delhi ,Rashtriya Janata Dal ,RJD ,Lalu Prasad Yadav ,Delhi ,Rashtriya ,Janata Dal ,Lalu Prasad… ,
× RELATED ககன்யான் திட்டத்தில் அடுத்த...