சேலம்: செங்கல் உற்பத்திக்கு சாதகமான சூழ்நிலை நிலவி வருவதால், சேலம் சுற்று வட்டார மாவட்டங்களில் செங்கல் உற்பத்தி செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.சேலம் மாவட்டத்தில் வீராணம், வலசையூர் உள்ளிட்ட பகுதிகளில் செங்கல் சூளைகள் அதிகளவில் உள்ளன. தவிர தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் செங்கல் சூளைகள் உள்ளன. தினசரி லட்சக்கணக்கான செங்கல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போது செங்கல்கள் உற்பத்தி செய்ய சாதகமான சூழ்நிலை நிலவுவதால் உற்பத்தியாளர்கள் தங்களுடைய உற்பத்தியை வேகப்படுத்தியுள்ளனர். அந்த வகையில், சேலம் அடுத்த வீராணத்தில் செங்கல் சூளைகளில் தொழிலாளர்கள் செங்கல் உற்பத்தி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுப்பட்டுள்ளனர். இது குறித்து வீராணத்தை சேர்ந்த செங்கல் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: தமிழகத்திலேயே சேலம் மாவட்டத்தில் தான் செங்கல் சூளைகள் அதிகம். இங்கு உற்பத்தி செய்யும் செங்கல்கள் தமிழகத்தில் பல இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த 2 மாதமாக சென்னை உள்பட பல நகரங்களில் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டதால், கட்டுமான பணியில் தொய்வு ஏற்பட்டது. இதன் காரணமாக வழக்கமாக நடக்கும் விற்பனையில் இருந்து 20 முதல் 30 சதவீதம் சரிந்தது.
கடந்த 15 நாட்களாக கட்டுமான பணிகள் அதிகரிக்க தொடங்கிவிட்டது. மேலும் தற்போது செங்கல் உற்பத்தி செய்ய சாதகமான சூழ்நிலை நிலவி வருகின்றது. அதிக மழை, வெயில் இல்லாமல் இருப்பதால், கடந்த சில நாட்களாக உற்பத்தியை அதிகப்படுத்தியுள்ளோம். உற்பத்தி செய்யப்படும் செங்கல்கள் உடனடியாக விற்பனைக்கு சென்றுவிடுகின்றன. ஒரு லோடு (3 ஆயிரம் செங்கல்) ₹14 ஆயிரம் முதல் ₹15 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. எங்களிடம் வாங்கிச்செல்லும் வியாபாரிகள் லோடு ₹18 ஆயிரம் முதல் ₹21 ஆயிரம் வரை விற்கின்றனர் என்றனர்.
