ஐடி நிறுவனங்கள் கடுமையாக பாதிப்பு: புருஷோத்தமன், ஐடி நிறுவனங்களின் கூட்டமைப்பு (நாஸ்காம்) முன்னாள் இயக்குனர்

சென்னையை பொறுத்தவரையில் தண்ணீர் பிரச்னை எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறது. தற்போது நிலைமை மிக மோசமாகி கொண்டிருக்கிறது. இதை சாப்ட்வேர் நிறுவனங்கள் உணர ஆரம்பித்து விட்டன. அதன் ஊழியர்களுக்கு  டேங்கர் லாரி தண்ணீர் வாங்கி விநியோகம் செய்யவே முடியாத நிலைக்கு பல நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன என்றும் செய்திகள் வருகின்றன. அந்த அளவுக்கு தண்ணீர் பற்றாக்குறை போய் கொண்டிருக்கிறது. காசு கொடுத்தாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. தண்ணீர் பிரச்னையால் முதலில் தொழில் நிறுவனங்கள் தான் பாதிக்கப்படுகின்றன. எப்போதும் அரசு மக்களுக்குத்தான் முதலில் தண்ணீர் தரும். அதுதான் முக்கியம். மக்களுக்கு குடிநீர் தருவது  அடிப்படை விஷயம். அடுத்ததாக தண்ணீர் இருந்தால் மற்ற ெதாழில் நிறுவனங்களுக்கு தரும். இப்போதுள்ள உச்சகட்ட பற்றாக்குறை நிலையில் மக்களுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும். அந்தவகையில்,  தற்போது, குடிநீர் கொண்டு  வரும் டேங்கர் லாரிகளை திருப்பி விட்டு மக்களுக்கு தருகின்றனர். இது, மிகவும் வரவேற்கத்தக்கது தான். பல நிறுவனங்களால் டேங்கர் லாரி தண்ணீரை வாங்குவது சிரமமாகத்தான் உள்ளது.

சென்னை மட்டுமல்ல, பல இடங்களிலும் உள்ள ஐடி நிறுவனங்கள் பல வெளிநாட்டு நிறுவனங்களுக்காகத்தான் வேலை செய்கின்றன. அந்த வெளிநாட்டு நிறுவனங்களிடம், சென்னையில் தண்ணீர் பிரச்னை என்று தொடர்ந்து கூறிக் கொண்டே  இருக்க முடியாது; அப்படி ஒரு நிலையை அவர்கள் உணர்ந்து விட்டால் மறுபரிசீலனை செய்ய துவங்குவர். சென்னையில் உள்ள ஐடி நிறுவனங்களுக்கு தங்களின்  ேவலையை தருவதை காட்டிலும் பெங்களூரு போன்ற மற்ற நகரங்களுக்கு  மாற்றித் தரலாம் என்ற மன ஓட்டத்தை ஏற்படுத்தி விடும். இதனால், இதை மனதில் கொண்டு பல நிறுவனங்கள் வெளியேறும் ஆபத்தும் இல்லாமல் இல்லை. ஐடி நிறுவனங்களுக்கு அதிகமாக தண்ணீர் தேவைப்படாது. அவர்கள், சாப்பிடுவதற்கும், கை கழுவதற்கு, பாத்ரூம் பயன்படுத்துவதற்கு மட்டுமே  தண்ணீர் தேவைப்படுகிறது. ஒரு ஐடி நிறுவனத்தை எடுத்து கொண்டால் 25 ஆயிரம் பேர் வேலை  செய்வார்கள். ஒரு ஆளுக்கு 4 லிட்டர் என்ற வகையில் 1 லட்சம் லிட்டர் தண்ணீர் இல்லாமல் ஐடி நிறுவனத்தை நடத்த முடியாது.  இப்போது நீர் மேலாண்மை திட்டத்தை பின்பற்றுங்கள்.தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்துங்கள், தண்ணீரை சேமிப்பது எப்படி என்று பல நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு சொல்ல ஆரம்பித்து விட்டனர். இப்படி சொன்னாலாவது தண்ணீர்  சிக்கனமாக பயன்படுத்துவார்கள் என்பதற்காக தான் அப்படி பேசி வருகின்றனர். இப்போதைக்கு மழை ஒன்று தான் இதற்கு நிரந்தர தீர்வாக இருக்க முடியும். அரசாங்கத்தை குறை சொல்ல முடியாது. எல்லோரும் சேர்ந்து தான் இந்த  பிரச்னையை தீர்க்க வேண்டும்.

சென்னையில் மட்டும் 600 ஐடி நிறுவனங்கள் உள்ளன. இதில், நான்கரை லட்சம் பேர் வேலை செய்து வருகின்றனர். இப்போதைக்கு ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு கூறியுள்ளனர். 5 ஆயிரம் பேர் மட்டுமே  வீட்டில் இருந்து வேலை செய்கின்றனர். பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நாங்கள் வேலை செய்யும் போது, அவர்கள் எங்கிருந்து நாங்கள் வேலை செய்கிறோம் என்பதை கண்காணிப்பார்கள். எனவே, ஐடி நிறுவனங்கள் எப்படி  இருந்தாலும்  ஊழியர்களை அலுவலகத்திற்கு வரச்சொல்லித்தான் ஆக வேண்டும். சாப்ட்வேர் நிறுவனங்களால் தான் அதிக வேலைவாய்ப்பு கிடைக்கிறது.  அதனால், அதை மனதில் கொண்டு இந்த தண்ணீர் பிரச்னையை தீர்வு காண வழி செய்ய வேண்டும். ஐடி நிறுவனங்கள் பல வெளிநாட்டு நிறுவனங்களுக்காக தான் வேலை செய்கின்றன.. அந்த நிறுவனங்களிடம், தண்ணீர் பிரச்னை என்று தொடர்ந்து கூறிக் கொண்டே இருக்க முடியாது.

Related Stories:

>