×

மருத்துவ பட்ட மேற்படிப்பில் சேருவதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மாற்றுவது குறித்து ஆலோசனை

சென்னை: மருத்துவ மேற்படிப்பில் சேர அரசு உயர் அதிகாரிகளின் உத்தரவாத பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையை மாற்றியமைப்பது தொடர்பாக அரசுடன் விவாதிக்கப்படும் என்று அட்வகேட் ஜெனரல் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2019-20ம் கல்வியாண்டில், மருத்துவ மேற்படிப்புக்கான விளக்கக் குறிப்பேட்டை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் வெளியிட்டது. அதில், மருத்துவ மேற்படிப்புக்கு ரூ40 லட்சமும், மருத்துவ பட்டய மேற்படிப்புக்கும் ரூ20 லட்சமும் பிணைத்தொகையாக செலுத்த வேண்டும் என்றும், இரண்டு அரசு உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவாத பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சென்னையை சேர்ந்த வக்கீல் சரவணன் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், அரசு அதிகாரிகளிடம் இருந்து உத்தரவாதம் பெறுவது இயலாது. இது மாணவர்களின் சேர்க்கை ரத்தாக காரணமாகிவிடும். எனவே, இந்த நிபந்தனையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத்  ஆகியோர் அடங்கிய அமர்வு,  மருத்துவ மேற்படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நபர்களின் முழுவிவரத்தையும், தகுதி இருந்தும் புதிய நிபந்தனைகளால் மருத்துவ மேற்படிப்பில் சேர முடியாமல் யாரும் உள்ளனரா என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மேலும், தமிழகத்தில் மருத்துவ அதிகாரிகள்  காலியிடங்கள் குறித்த விவரத்தையும் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, மருத்துவ மேற்படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பட்டியலை தாக்கல் செய்தார். அவரிடம் நீதிபதிகள், 2 அரசு உயரதிகாரிகளின் பிரமாணப்பத்திரம் குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு அட்வகேட் ஜெனரல், தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 386 மருத்துவ அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளது. மருத்துவ மேற்படிப்புக்கு அரசு உயரதிகாரிகளிடம் பிரமாண பத்திரம் பெறும் நடைமுறை கேரளா மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. இருந்தபோதிலும், இந்த நிபந்தனையை மாற்றியமைப்பது தொடர்பாக தமிழக அரசுடன் கலந்தாலோசிக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து, வழக்கில் விசாரணையை ஜூன் 17ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Tags : Medical Faculty , Medicare supervision, conditional, counseling
× RELATED இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு