×

காலமாற்றத்தில் அந்தஸ்து உயர்ந்தாலும் மாஜி பாஸ்க்கு சல்யூட் போட்ட இன்ஸ்: புதிய எம்பி.யை பாராட்டும் மக்கள்

அமராவதி: ஆந்திராவில் ஓர் ஆண்டுக்கு முன்பு ததிபாத்ரி பகுதியில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியில் கலவரம் ஏற்பட்டது. அப்போது ஒருவர் கொல்லப்பட்டார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கொரண்டலா மாதவுக்கும் அனந்த்பூர் தொகுதி தெலுங்குதேசம் எம்.பி. ஜே.சி.திவாகர் ரெட்டிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸ்காரர்களை ஆவேசமாக திவாகர் ரெட்டி திட்டினார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், “சீருடையில் இருக்கும் காவலரை யார் அவதூறாக பேசினாலும் அவன் நாக்கை அறுப்பேன்” எனக் கூறினார் கொரண்டலா மாதவ். இது அப்போது ஆந்திராவில் பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பின்னர் எழுந்த சர்ச்சையால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட்டார் மாதவ்.

பழைய இன்ஸ்பெக்டர் மாதவ், இப்போது, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. அனந்த்பூர் மாவட்டத்தில் உள்ள ஹிந்த்பூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், தெலுங்குதேசம் வேட்பாளர் கிறிஸ்டப்பா நிம்மலாவை 1,40,748 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து எம்.பி.யாக தேர்வாகி இருக்கிறார்.

கடந்த 23ம் தேதி ஹிந்த்பூர் தொகுதியில் வாக்குகள் எண்ணும் பணி மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது, தேர்தல் பாதுகாப்பு பணியில் டிஎஸ்பி மஹபூப் பாஷா ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த கொரண்டலா மாதவ், சற்றும் யோசிக்காமல் தனது முன்னாள் உயர் அதிகாரியை பார்த்ததும் அவருக்கு சல்யூட் அடித்து மரியாதை செய்தார். பதிலுக்கு பாஷாவும் மாதவுக்கு வணக்கம் தெரிவித்தார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எம்.பி. ஒருவர் போலீஸ் அதிகாரிக்கு சல்யூட் அடிக்கலாமா என்று புரோடக்கால் விஷயங்களை எழுப்பி நெட்டிசன்கள் விவாதத்தில் இறங்கிவிட்டனர். தனது முன்னாள் அதிகாரியை பார்த்ததும் மரியாதை நிமித்தமாக சல்யூட் அடித்ததாக மாதவ் கூறியுள்ளார். எது எப்படியோ? முன்பு ஆவேச போச்சால் பிரபலமானார். இப்போது, அடக்கமான செயலால் பிரபலமாகியுள்ளார் என ஆந்திர மக்கள் அவரை பாராட்டுகின்றனர்.

Tags : Majesty ,Salute Ince , Transition, status, magic bass, salute count
× RELATED அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி...