×

அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு ரயில்கள் நிறுத்தம் பயணிகள் அவதி

அரக்கோணம்: அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் நேற்று நடுவழியில் நிறுத்தப்பட்டது. வேலூர் மாவட்டம், அரக்கோணம்- திருத்தணி செல்லும் ரயில் மார்க்கத்தில் வடக்கு கேபின் அருகே நேற்று காலை 8.55 மணியளவில் திடீரென சிக்னலில் கோளாறு ஏற்பட்டது. இதனால் இவ்வழியாக ரயில்கள் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.  

இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே அதிகாரி மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சிக்னலில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் திருப்பதியில் இருந்து சென்னை செல்லும் கருடாத்திரி எக்ஸ்பிரஸ், திருத்தணியிலிருந்து சென்னை செல்லும் மின்சார ரயில், திருப்பதி பாசஞ்சர் உள்ளிட்ட பல்வேறு ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன.

ஊழியர்கள் போராடி காலை 9.50 மணியளவில் சிக்னலில் ஏற்பட்ட கோளாறை சரி செய்தனர். இதையடுத்து ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்ட ரயில்கள் காலதாமதமாக ஒவ்வொன்றாக இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், திருத்தணி- அரக்கோணம் ரயில் நிலையங்களுக்கிடையே சுமார் 1 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Tags : passenger ,passengers ,Arakkonam , Arakkonam, signal disruption, trains stop, passengers, disaster
× RELATED 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு...