×

நெல்லை பேட்டையில் அடிப்படை வசதியின்றி அல்லாடும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள்

பேட்டை: நெல்லை பேட்டை சத்யாநகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் பொதுமக்கள் செய்வதறியாது திகைக்கின்றனர். நெல்லை பேட்டை அரசு ஐடிஐ அருகே சத்யாநகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் உள்ளது. இங்கு மாற்றுத்திறனாளிகளுக்கு 63 தனி வீடுகள், தாமிரபரணி ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பாளர்களுக்கு 144 இரண்டு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள், டவுன் பாட்டப்பத்து, பழையபேட்டை, பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வாடகை வீட்டில் குடியிருக்கும் பயனாளிகளுக்கு நான்கு அடுக்குமாடி குடியிருப்புகள் 432 என மொத்தம் 639 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இங்கு குடியிருப்பவர்களுக்கு குடிநீர், சாலை, தெருவிளக்கு, கழிவுநீரோடை, பஸ் வசதி போன்ற அடிப்படை வசதிகளின்றி பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

குடியிருப்புவாசிகளின் தண்ணீர் தேவைக்காக 6 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளிகள் குடியிருப்பிலுள்ள 2 ஆழ்துளை கிணறுகளும் வறண்டதால் மின் மோட்டார்களும் அகற்றப்பட்டன. 144 குடியிருப்புகளுக்கு அமைக்கப்பட்ட 2 ஆழ்துளை கிணறுகளில் ஒன்று மட்டும் செயல்படுகிறது. நாளொன்றுக்கு 2 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீதம் வாரத்திற்கு 15 ஆயிரம் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இதனை தேக்கி வைக்க சம்ப் அமைக்கப்பட்டுள்ளது. 432 வீடுகளுக்கு இரண்டு ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டதில் ஒன்று மட்டுமே செயல்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் தண்ணீரை சேமிக்க 25 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சம்ப் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்ப் வாரம் ஒரு முறை மட்டுமே நிரம்பும் நிலை உள்ளது. இதனை கொண்டு மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யவே முடியவில்லை. மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போர் இரண்டு வீடுகளுக்கு 500 லிட்டர் சின்டெக்ஸ் தொட்டி பொருத்தப்பட்டுள்ளது. அதிலும் கீழடுக்கு குடியிருப்புவாசிகள் அதிகளவு தண்ணீர் பிடித்து செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குடிநீர் ஆதாரத்தினை பொருத்தமட்டில் 63 வீடுகளை உள்ளடக்கிய மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று பொதுநல்லிகள் அமைக்கப்பட்டுள்ளன. அடுக்கு மாடிகளில் குடியிருக்கும் 576 குடும்பத்தாருக்கு ஒரே ஒரு பொதுநல்லி மட்டுமே உள்ளது. அதன்மூலம் காலை வீட்டு வேலைகளை முடித்து பணிக்கு திரும்புவோர் இந்த ஒரு நல்லி மூலம் குடிநீர் பெற்று பிற வேலைகளை செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது.

இரண்டு அடுக்கு மாடி, நான்கு அடுக்கு மாடிகளில் வசிப்போர் குடங்களில் தண்ணீரை சுமந்து செல்வது சவாலாக உள்ளது. இதில் வயோதிகர்கள் குடங்களில் மாடிகளுக்கு தண்ணீர் பிடித்துச் செல்வதற்கு சிரமப்படுகின்றனர். 144 வீடுகளை உள்ளடக்கிய 2 மாடியில் குடியிருப்போர் வீடுகளின் கழிப்பறை தரைதளங்கள் உடைந்து காணப்படுகிறது. கழிப்பறை மற்றும் கழிவுநீர் சேகரிக்கப்படும் செப்டிக் டேங்க் முற்றிலும் நிரம்பிய பிறகும் கழிவுகள் அகற்றப்படாததால் தேக்கமடையும் கழிவு நீர் ஆங்காங்கே தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுத்தி வருகிறது. இதனால் வீடுகளில் வசிக்க முடியாத நிலை உள்ளது. ஏற்கனவே கொசு மூலம் டெங்கு போன்ற கொடிய நோய்கள் பரவி வரும் நிலையில் இந்த குடியிருப்புகள் கொசு உற்பத்தி கேந்திரமாக மாறியுள்ளது.இப்பகுதி மக்களுக்கு போதுமான சாலை, தெருவிளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் பெண்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். பாதாள சாக்கடை குழிகள் தோண்டப்பட்டு மூடப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் குறுகிய இச்சாலையில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட பகுதி சேறும் சகதியுமாய் மாறிவிடும். இதனால் பள்ளி, கல்லூரி, பிறவேலைகளுக்கு செல்வோரை அழைக்க வரும் வாகன ஓட்டிகள் வர மறுக்கின்றனர். 639 குடியிருப்புகளை உள்ளடக்கிய இப்பகுதியில் வசிக்கும் மக்கள், நெல்லை டவுன் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு கல்வி உள்ளிட்ட மற்ற வேலைகளுக்கு சென்று வர ஏதுவாக சிற்றுந்து வசதியில்லாததால் ஆட்டோவிற்கு அதிக கட்டணம் கொடுத்து செல்ல வேண்டியுள்ளது. எனவே சத்யாநகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்புவாசிகள் நலன்கருதி அடிப்படை தேவைகளான அனைவருக்கும் தனித்தனி சின்டெக்ஸ், சாலை, தெருவிளக்கு, வாறுகால், பஸ் வசதி போன்றவற்றை மாவட்ட நிர்வாகம் செய்துதர வேண்டுமென்று அப்பகுதிமக்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து சத்யாநகர் குடிசை மாற்று வாரியத்தில் குடியிருந்து வரும் பொன்னுசாமி கூறுகையில், இரண்டு அடுக்கு மாடிகள் கொண்ட குடியிருப்பில் 144 வீடுகள், நான்கு அடுக்குமாடி குடியிருப்பில் 432 வீடுகளை உள்ளடக்கிய மொத்தம் 576 குடியிருப்புகளுக்கு பொதுவாக ஒரே ஒரு குடிநீர் பொதுநல்லி மட்டுமே உள்ளது.

இங்கு அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளால் ஒரு பிரயோஜனமும் இல்லை. இரண்டு வீடுகளுக்கு சேர்த்து 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு சின்டெக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. அதிலும் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் ஏற்றப்படுகிறது. 250 லிட்டர் தண்ணீரை வைத்துக் கொண்டு இரண்டு குடும்பங்கள் வாரம் முழுவதும் எவ்வாறு சமாளிக்க முடியும். இங்கு பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் குடியிருந்து வருகின்றனர். வேலைகள் காரணமாக குறிப்பிட்ட மூன்று மணி நேரம் வழங்கப்படும் குடிநீரை ஒரேயொரு பொதுநல்லியில் பிடிப்பதில் கடும்போட்டி நிலவுகிறது. இது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்படுவதால் மோதல்கள் உருவாகிறது. இதனை அதிகாரிகளிடம் தெரிவித்தும் யாரும் கண்டுகொள்வதாக இல்லை. எனவே கலெக்டர் இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் தனித்தனியே குடிநீர் இணைப்பு கொடுத்து நிரந்தர தீர்வு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். பொதுமக்கள் நெல்லை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்ல 2 கிமீ நடந்துசென்று அங்கிருந்து வாகனங்களை பிடித்து செல்ல வேண்டியுள்ளது. அதற்கென சிற்றுந்து வசதி ஏற்படுத்தி கொடுத்தால் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும், என்றார். குடியிருப்பு கட்டிக் கொடுத்தால் மட்டும் போதுமா, அங்கு பொதுமக்கள் குடியிருக்க அத்தியாவசிய தேவைகள், வசதிகள் செய்து தர வேண்டாமா? இதை அரசும், மாவட்ட நிர்வாகமும் உணர்ந்தால் மட்டுமே இப்பகுதி மக்களுக்காக அடிப்படை வசதிகள் பூர்த்தியாகும்.

Tags : Nellai, Cottage Alternate Boards
× RELATED பாஜகவுக்கு கூட்டணி அமைக்காததால் தான்...