×

தூத்துக்குடியில் பரபரப்பு ஸ்டாலின் தங்கும் விடுதியில் பறக்கும் படையினர் திடீர் சோதனை

தூத்துக்குடி: தூத்துக்குடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தங்கும் விடுதியில் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மறவன்மடத்தில் மு.க.ஸ்டாலின் தங்குவதாக இருந்த தனியார் விடுதிக்கு வந்த வாகனங்கள் அனைத்தையும் வேளாண் துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், துணை தாசில்தார் முத்து, சிறப்பு எஸ்ஐ ஆதிலிங்கம் ஆகியோர் அடங்கிய பறக்கும் படையினர் அதிகாலை 5 மணி முதல் திடீர் சோதனை நடத்தினர்.

 விடுதிக்கு வெளியே நின்ற மு.க.ஸ்டாலின் பிரசார வாகனம், கருப்பு பூனை பாதுகாப்பு படையினர் வந்த வாகனங்கள், பைலட் வாகனங்கள், பாதுகாப்பிற்காக வந்த இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வந்த வாகனங்கள், உதவியாளர்களின் வாகனங்கள், ஸ்டாலினை சந்திக்க வந்தவர்களின் வாகனங்கள், உள்ளிட்ட சுமார் 25க்கும் மேற்பட்ட வாகனங்களையும் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனையிட்டனர். இது அங்கு கூடியிருந்த திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. அவர்கள் அதிகாரிகளை முற்றுகையிட தயாராயினர். மேலும் தொண்டர்கள் அதிகாரிகளிடம் சென்று ‘இத்தொகுதியில் ஆளும் கட்சியினர், சில அமைச்சர்கள் நேரடியாகவே பணப்பட்டுவாடா செய்கின்றனர். அவர்களையெல்லாம் பிடிக்காமல் இங்கு வந்து சோதனை செய்கிறீர்களே ஏன்’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பறக்கும் படையினர், தேர்தல் கமிஷன் உத்தரவின் பேரில் தான் சோதனை நடத்துகிறோம் என்று சமாளித்தனர். இதற்கிடையே பிரசாரத்தை முடித்துக் கொண்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் காலை 10.30 மணியளவில் அந்த விடுதிக்கு திரும்பினார். அவர் வருவதற்கு சற்று நேரம் முன்னதாகத்தான் பறக்கும் படையினர் அங்கிருந்து சென்றனர்.


தேர்தல் ஆணையம் பாரபட்சம்

ஓட்டப்பிடாரம் தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அடுத்தடுத்து ஏற்கனவே பிரசாரம் செய்தனர். அப்போது தேர்தல் பறக்கும் படையினர் எந்த வாகனங்களிலும் சோதனை நடத்தவில்லை. மேலும் ஆளும் கட்சி அமைச்சர்கள், நிர்வாகிகள் சர்வ சாதாரணமாக கார்களில் ஓட்டப்பிடாரத்திற்கும், தூத்துக்குடிக்கும் சென்று வருகின்றனர். அவர்களின் வாகனங்களில் சம்பிரதாயத்திற்குக் கூட தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தவில்லை. இந்நிலையில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் 2ம் கட்ட பிரசாரத்திற்காக ஸ்டாலின் நேற்று வந்த நிலையில் அவரது பிரசார வாகனம், பாதுகாவலர் வாகனங்களில் சோதனை நடத்தப்பட்டது திட்டமிட்ட சதி என்றும், பிரசாரத்தை தாமதப்படுத்தவே இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுவதாகவும் திமுக கூட்டணி கட்சியினர் குற்றம் சாட்டினர். தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Tags : Soldier ,Tuticorin Studios Hotel , Thoothukudi, Stalin, Flying Force,
× RELATED ராணுவ வீரர் மாயம்