×

சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை கட்டாயம் பூத் சிலிப் காட்டி வாக்களிக்க முடியாது: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள 11 ஆவணங்களை காட்டினால் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். பூத் சிலிப் காட்டி வாக்களிக்க முடியாது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ள 4 சட்டமன்ற பேரவைக்கான இடைத்தேர்தல் மற்றும் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதியில் வாக்களிப்பவர்கள் வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக, பின்வரும் மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனுமொன்றை காண்பிக்க வேண்டும். அதன்படி, பாஸ்போர்ட்,  ஓட்டுநர் உரிமம், மத்திய / மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால்  வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், புகைப்படத்துடன் கூடிய வங்கி / அஞ்சலக கணக்கு புத்தகங்கள், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை, தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்,  பாராளுமன்ற/சட்டமன்ற/சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டு இவைகளில் ஏதாவது ஒன்றை கட்டாயம் காண்பிக்க வேண்டும்.

புகைப்பட வாக்காளர் சீட்டு இனிமேல் வாக்களிப்பதற்கான தனித்த அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. எனினும், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக புகைப்பட வாக்காளர் சீட்டு தொடர்ந்து அச்சிடப்பட்டு வழங்கப்படும். ஒரு வாக்காளர் வேறொரு சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருப்பாரேயானால் அந்த அடையாள அட்டையையும் இந்திய தேர்தல் ஆணையம் காட்டும் ஆவணமாக பயன்படுத்தலாம். ஆனால் அந்த வாக்காளருடைய பெயர் அந்த வாக்குச்சாவடிக்குரிய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். அதேபோன்று, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் மட்டுமே ஒருவர் வாக்குரிமையை செலுத்த தகுதியுடையவர் ஆவார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Tags : Boat Chilip ,Election Commission of India , Assembly Election, Voter Identity Card, Indian Election Commission, Announcement
× RELATED குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை...