×

முதல்நிலை சார்பதிவாளர் அலுவலகங்களில் அரசாணையை மீறி உதவியாளர்கள் நியமனம்: பதிவுத்துறையில் சர்ச்சை

சென்னை: முதல்நிலை சார்பதிவாளர் அலுவலகங்களில் அரசாணையை மீறி உதவியாளர்கள் நியமனம் செய்யப் பட்டு இருப்பது பதிவுத்துறையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதில், உதவியாளர், எழுத்தர், சார்பதிவாளர் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில், சார்பதிவாளர்களுக்கு உதவியாக உதவியாளர்கள் ஆவண பதிவுக்கு வரும் பத்திரங்களை ஆய்வு செய்து பதிவுப்பணிக்கு அனுப்பி வைப்பார்கள். இவர்களுக்கு பத்திரங்களில் கையொப்பம் இடும் அதிகாரம் இல்லை. இந்த பணியை சார்பதிவாளர்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். ஆனால், பெரும்பாலான சார்பதிவாளர் அலுவலகங்களில் உதவியாளர்கள் சார்பதிவாளர்களின் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மாறாக, பெரும்பாலான சார்பதிவாளர்கள் நிர்வாகம், சீட்டு, சங்கம் உள்ளிட்ட இதர பதிவு அல்லாத பணிகளுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை பதிவுப்பணிக்கு அனுப்பாமல் சார்பதிவாளர் அலுவலகங்களில் உதவியாளர்களை பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, பட்டுக்கோட்டை 1ம் இணை சார்பதிவாளர் அலுவலகம், மார்த்தாண்டம், அரக்கோணம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் உதவியாளர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த உதவியாளர்களுக்கு பத்திரப்பதிவு குறித்த போதிய அனுபவம் இல்லாத நிலையில் அவர்களை நியமிப்பதால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. குறிப்பாக, சமீபத்தில் கூட ஐகோர்ட் உத்தரவை மீறி அங்கீகாரம் இல்லாத மனையை உதவியாளர்கள் பத்திரம் பதிவு செய்துள்ளனர்.

இது போன்று அவர்கள் விதிகளை மீறி பத்திர பதிவு செய்வதால் ஐகோர்ட் கண்டனத்திற்கு பதிவுத்துறை தலைமை ஆளாக நேரிட்டது. எனவே, தான் பதிவுத்துறை ஐஜி கூட சார்பதிவாளர் அலுவலகங்களில் சார்பதிவாளர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று மண்டல டிஐஜிக்களுக்கு உத்தரவிட்டிருந்தனர். ஆனால், மண்டல டிஐஜிக்கள் உதவியாளர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று கொண்டு உதவியாளர்களை சார்பதிவாளர்கள் பொறுப்புக்கு நியமித்துள்ளனர். குறிப்பாக, முதல் நிலை சார்பதிவாளர் அலுவலகத்தில் கூட மாவட்ட பதிவாளர் அல்லது முதுநிலை சார்பதிவாளர்களை நியமிக்காமல் உதவியாளர்களை நியமித்துள்ளனர். இது, அரசாணையை விதிமுறையை மீறிய செயலாக இருந்தாலும், மண்டல டிஐஜிக்கள் பணம் பெற்று கொண்டு உதவியாளர்களை நியமித்துள்ளனர். இது தொடர்பாக பதிவுத்துறை ஐஜி அலுவலகத்திற்கு ஏராளமான புகார்கள் சென்றுள்ளன. ஆனால், இந்த புகார் மீது பதிவுத்துறை ஐஜி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், சார்பதிவாளர்கள் பொறுப்பில் தற்போது வரை உதவியாளர்கள் தான் பணிபுரிந்து வருகின்றனர் என்று சார்பதிவாளர்கள் சிலர் தெரிவித்தனர். எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு சார்பதிவாளர்கள் பொறுப்புக்கு உதவியாளர்களை நியமிப்பதை தடுக்க வேண்டும் என்று சார்பதிவாளர்கள் சிலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Assistant nominees ,regulatory offices ,Chief Executive Officers , Preliminary Officer Offices Assistants are appointed to violate the regulation: controversy in the registry
× RELATED கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை...