துரைப்பாக்கம்: கண்ணகி நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடப்பிரிவில் ஆங்கில வழிக் கல்வி கொண்டு வர வலியுறுத்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகராட்சி, 15வது மண்டலம், 195வது வார்டுக்கு உட்பட்ட துரைப்பாக்கம் கண்ணகி நகரில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. ஆனால், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு தமிழ் வழிக் கல்வி மட்டுமே உள்ளது. இதனால், கண்ணகி நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், அடையாறு, மயிலாப்பூர் போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு சென்று ஆங்கில வழிக் கல்வியில் பிளஸ் 1 பயிலும் நிலை உள்ளது.
அதன்படி, இந்தாண்டு கண்ணகி நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு முடித்த மாணவர்கள், வேறு பகுதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு சென்று, ஆங்கில வழிக் கல்வியில் பிளஸ் 1 சேர விண்ணப்பம் கேட்டால், அந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பம் வழங்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு சென்று ஆங்கில வழிக் கல்வியில் பிளஸ் 1 சேர விண்ணப்பம் கேட்கும் மாணவர்களை, அந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பல்வேறு காரணங்களை கூறி, விண்ணப்பம் வழங்காமல் திருப்பி அனுப்புவதாக கூறப்படுகிறது.
இதை கண்டித்தும், கண்ணகிநகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடப்பிரிவுகளுக்கு ஆங்கில வழிக் கல்வியை கொண்டு வர வலியுறுத்தியும் மாணவர்கள் தங்களின் பெற்றோருடன் நேற்று கண்ணகி நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த கண்ணகி நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், ‘‘கண்ணகி நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வியில் பயின்ற மாணவர்கள், வேறு பள்ளிகளுக்கு சென்று பிளஸ் 1 சேர விண்ணப்பம் கேட்டால், தர மறுக்கின்றனர். மேலும், தங்களது பள்ளியில் இடம் இல்லை. நீங்கள் தொழில் கல்வியில் சேர்ந்து படிக்கலாமே, என திருப்பி அனுப்புகின்றனர். அப்படியே சீட் கிடைத்தாலும் அடையாறு, மயிலாப்பூர் என நீண்ட தூரம் அலைய வேண்டியுள்ளது. எங்களது பகுதயில் இருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல போதிய பஸ் வசதியும் இல்லை. எனவே, தங்களது பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியிலேயே பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடப் பிரிவுகளுக்கு ஆங்கில வழிக் கல்வியை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.
