×

நிலக்கரி மாபியா குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் 100 தோப்புக்கரணம் போட தயாரா? மோடிக்கு மம்தா சவால்!

கொல்கத்தா : எங்கள் மீதான நிலக்கரி மாபியா குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் 100 தோப்புக்கரணம் போட தயாராக உள்ளீர்களா என பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மேற்கு வங்கத்தில் நிறைய முறைகேடான நிலக்கரி சுரங்கங்கள் இயங்கி வருகிறது. இதை வைத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பலர் மோசமான முறையில் தவறாக சம்பாதித்து வருகின்றனர் என குற்றம் சாட்டினார். மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிறுத்தி இருக்கும் 42 வேட்பாளர்களும் நிலக்கரி சுரங்க மாபியாக்கள்தான் என்றும், இந்த தேர்தலுக்கு பின் மேற்கு வங்கத்தில் ஆட்சி கவிந்து திரிணாமுல் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைவார்கள் என்று மோடி கூறினார்.

இந்நிலையில் மோடியின் பேச்சுக்கு பதிலளித்துள்ள மம்தா பானர்ஜி, திரிணாமுல் வேட்பாளர்கள் மீது மோடி ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறார் என்று கூறியுள்ளார். மேலும் மோடி எங்கள் வேட்பாளர்கள் 42 பேரை குற்றவாளி என்று நிரூபித்தால் நான் அவர்கள் 42 பேரின் வேட்புமனுக்களை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன், ஆனால் அப்படி நிரூபிக்கவில்லை என்றால் மோடி மேற்கு வங்க மக்கள் முன்பு காதில் கை வைத்து 100 தோப்புக்கரணம் போட வேண்டும் என சவால் விட்டுள்ளார்.

பாராளுமன்ற அறிக்கையின் படி மேற்கு வங்கத்தில் நாங்கள் 40% வேலையின்மையை குறைத்திருக்கும் நிலையில், உங்களால் அதை ஏன் செய்ய முடியவில்லை என்றும் மம்தா பேனர்ஜி வினவியுள்ளார். மேலும் பாஜக ஆட்சிக்கு வந்தால் 10 கோடி பேருக்கு வேலை கொடுப்பதாக கூறினீர்கள், ஆனால் அந்த வேலைகள் எங்கே என்றும், இந்திய வரலாறு குறித்து உங்களால் பேச முடியுமா, உங்களால் முதலில் பேப்பர், டெலிபிராம்ப்டர் இல்லாமல் பேச முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் இவைகள் குறித்து என்னுடன் நீங்கள் விவாதம் நடத்த தயாரா என்று பிரதமர் மோடிக்கு, மம்தா பேனர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.


Tags : Mamata ,Modi , Coal mafia,Prime Minister Modi,Mamata Banerjee,Lok Sabha election
× RELATED சந்தேஷ்காலி பற்றி பொய் பேசுகிறார்...