×

கூத்தாநல்லூர் மணக்கரையில் பராமரிப்பின்றி செடி கொடிகள் மண்டி காணப்படும் வெட்டுக்குளம்

கூத்தாநல்லூர்: கூத்தாநல்லூர் அருகே உள்ள மணக்கரை கிராமத்தில் உள்ள வெட்டுக்குளத்தை அரசு தூர்வாரி மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூத்தாநல்லூரில் இருந்து கம்மங்குடி செல்லும் பிரதான சாலையில் அமைந்திருப்பது மணக்கரை கிராமம். இந்த கிராமத்தின் மத்தியில் அமைந்திருப்பதுதான் வெட்டுக்குளம். சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்களின் குளியலுக்கும், நிலத்தடி நீர் குறைவில்லாமல் கிடைப்பதற்கும், குறிப்பாக ஆடுமாடுகள் தாகம் தீர்ப்பதற்கும் பெரிதும் பயன்பட்டு வந்தது இந்த வெட்டுக்குளம். கடந்த சில ஆண்டுகளாக இந்த குளம் முறையாக தூர்வாரப்படவில்லை. மேலும் சமீபத்தில் அடித்த கஜா புயலினால் இந்த குளத்தில் ஏராளமான மரங்களும் முட்செடிகளும் விழுந்து குளத்தை பாழ்படுத்தி விட்டது. அதனால் இந்த குளத்தை மக்கள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டு முட்செடிகள் மண்டி பயனற்று கிடக்கிறது.

அரசு உடனடியாக தலையிட்டு வெட்டுக்குளத்தில் கிடக்கும் முட்செடிகளை கரையேற்றுவதுடன், தூர்வாரி, மக்கள் பயன்படுத்தும் வகையில் படித்துறைகள் அமைத்து தரவேண்டும் . இந்த குளம் தற்போது மேடாக ஆகி விட்டதால் குளத்தின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விடுகிறது. அதனால் 15 அடியில் கிடைத்த நிலத்தடி நீர் தற்போது 50லிருந்து 60 அடிக்கு கீழே போய் விட்டது. குளத்தை தூர்வாருவது தான் இதற்கெல்லாம் ஒரே தீர்வு என மணக்கரை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kuttanallur Vettukulam ,Mandi , Vettukulam, Koothanallur
× RELATED ஹிமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் கங்கனா ரானாவத் வேட்பு மனு தாக்கல்