×

ராகுல், சோனியா போட்டியிடும் அமேதி, ரேபரேலி உள்பட 51 தொகுதிகளில் 5ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: மேற்கு வங்கத்தில் அதிக வாக்குப்பதிவு

லக்னோ: நாடு முழுவதும் 7 மாநிலங்களில் 51 மக்களவை தொகுதிகளில் இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மாயாவதி உள்ளிட்ட தலைவர்கள் வாக்களித்தனர். மக்களவைக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், இன்று 5வது கட்டமாக 7 மாநிலங்களில் அமைக்கப்பட்ட 96,088 வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட 51 தொகுதிகளில் விறுவிறுப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த 5ம் கட்டத் தேர்தலில் 674 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மொத்தம் 8.75 கோடி பேர் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர். மேற்கு வங்கத்தில் முந்தைய வாக்குப்பதிவின்போது வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதால், இன்று தேர்தல் நடக்கும் 7 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஆந்திர மாநில சட்டப் பேரவைக்கும், அந்த மாநிலத்திலுள்ள மக்களவைத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 11ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது  5 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து 3 சட்டப் பேரவைத் தொகுதிகள், 5 மக்களவைத் தொகுதிகளுக்குட்பட்ட 5 வாக்குச்சாவடிகளில் மட்டும் இன்று பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஒருசில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் கருவிகள் பழுது ஏற்பட்ட நிலையில், அவை சரிசெய்யப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் தொகுதியில் 2 கட்டமாக வாக்குப்பதிவு முடிந்த நிலையில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் நடந்தது. இன்றைய தேர்தலில், பாஜ சார்பில் 48 வேட்பாளர்கள், காங்கிரஸ் - 46, பிஎஸ்பி - 33, சிபிஎம் - 11, எஸ்பி - 9, ஏஐடிசி - 8, சிவசேனா - 5, சிபிஐ - 3, சுயேச்சை, இதர கட்சிகள் - 511 என்ற வகையில் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கடந்த நான்கு கட்டமாக நடந்து முடிந்த தேர்தலில் 374 தொகுதிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. இன்றைய வாக்குப்பதிவுடன் 430 தொகுதிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. அடுத்ததாக வரும் 12ம் தேதி மற்றும் 19ம் தேதிகளில் தலா 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின், மே 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதன்பின், மத்தியில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது தெரியவரும்.

இந்நிலையில், இன்றைய தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சமாஜ்வாதி வேட்பாளரான நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மனைவி பூனம் சின்ஹா,  மத்திய அமைச்சர்கள் ராஜ்யவர்தன் சிங் ராத்தோர், ஜெயந்த் சின்ஹா, அர்ஜுன் ராம் மேக்வால், வீரேந்திர குமார் கடிக், பாஜ எம்பிக்கள் ராஜீவ் பிரதாப் ரூடி, அஜய் நிஷாத், பிரகலாத் படேல், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் சகோதரரும், பீகார் அமைச்சருமான பசுபதி குமார் பாரஸ், காங்கிரஸ் எம்எல்ஏவும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான கிருஷ்ணா புனியா, முன்னாள் மத்திய அமைச்சர்கள் பன்வார் ஜிதேந்திர சிங், ஜிதின் பிரசாத் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.

இதில், இன்று மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ராஜீவ் பிரதாப் ரூடி, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட தலைவர்கள் வாக்காளர்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். மேற்குவங்க மாநிலம் பராக்பூர் தொகுதியில் இன்று காலை வழக்கம் போல் வாக்குப்பதிவு துவங்கியது. காலை முதலே அதிக அளவிலான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்க துவங்கினர். இந்நிலையில், பாஜ சார்பில் போட்டியிடும், வேட்பாளர் அர்ஜுன் சிங், வாக்குச்சாவடிக்கு வந்த போது, அங்கிருந்த திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், அர்ஜுன் சிங்கிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த பாஜ தொண்டர்களுக்கும், திரிணமுல் காங்கிரசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார், அவர்களை அப்புறப்படுத்தினர், இந்நிலையில்  7 மாநிலங்களில் 51 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

மாலை 6 மணி வரை 5ம் கட்ட மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள்

மேற்கு வங்கம் : 74.15%
மத்தியப் பிரதேசம் : 63.40%
ராஜஸ்தான் : 63.22%
உத்தரப் பிரதேசம் : 54.31%
ஜார்க்கண்ட் : 64.23%
பிகார் : 57.76%
ஜம்மு- காஷ்மீர்: 17.07%

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rahul ,contest ,Sonia ,Rae Bareilly ,Amethi , Rahul, Sonia contesting in Amethi and Rae Bareilly in 5 constituencies in five constituencies Completed: Highest West Bengal
× RELATED என்னுடைய மகனையே உங்களிடம்...