×

100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி, 2024-25ம் ஆண்டுக்கு ரூ.1,229.04 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை!!

சென்னை : மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு கடந்த ஏப்ரல் 1 முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, ஊரக வளர்ச்சித் துறை செயலர் செந்தில்குமார் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: மத்திய அதிகாரமளித்தல் குழுவின் கூட்டம் கடந்த மார்ச் 27ம் தேதி நடைபெற்றது. இக்குழு கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் இந்த 2024-25ம் ஆண்டில் தமிழகததுக்கு 20 கோடி மனித நாட்களை அனுமதிக்கும் தொாழிலாளர் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்தது.

மேலும், நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.319 ஊதியம் வழங்கவும் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, திட்டத்தில் இருந்த நிலுவைத் தொகை உட்பட ரூ.921 கோடியே 78 லட்சத்து 22 ஆயிரம் நிதியை தமிழகத்துக்கு கடந்த ஏப்ரல் 25ம் தேதி மத்திய அரசு ஒதுக்கியது.இதைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், மத்திய அரசின் 75 சதவீதம் நிதியான ரூ.921 கோடியே 78 லட்சத்து 22 ஆயிரம் உடன், மாநில அரசின் 25 சதவீத நிதியான ரூ.307 கோடியே 26 லட்சத்து 7,333 என ரூ.1229 கோடியே 4 லட்சத்து 29 ஆயிரத்து 333 ஐ பயன்படுத்த ஒப்புதல் அளிக்கும்படி தெரிவித்திருந்தார். இதை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, அந்த நிதியை பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.மேலும், இந்த திட்டம் தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ள வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மேலும் நிதி பயன்படுத்தப்பட்டதற்கான சான்றிதழை உரிய விதிகள் படி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்,”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post 100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி, 2024-25ம் ஆண்டுக்கு ரூ.1,229.04 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை!! appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,
× RELATED சென்னை கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில்,...