×

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் காற்றாலை திட்டம் : அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு!!

கொழும்பு : அதானி நிறுவனம் இலங்கையில் மேற்கொண்டுள்ள காற்றாலை திட்டத்தை எதிர்த்து அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இலங்கையின் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள மன்னார், பூணெரின் ஆகிய இடங்களில் 484 மெகா வாட் காற்றாலை மின்நிலையங்களை உருவாக்கும் அதானியின் திட்டங்களுக்கு அந்நாட்டு அரசு சமீபத்தில் அங்கீகாரம் வழங்கியது. இதற்காக இலங்கை அரசு அதானி கிரீன் எனர்ஜி இடையே 20 ஆண்டுகால ஒப்பந்தம் கையெழுத்தானத்தை அடுத்து, பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இலங்கையின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அதானி நிறுவனம் காற்றாலைகளை நிறுவவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

அதானியின் காற்றாலைகள் திட்டங்களை எதிர்த்து இலங்கையின் பழமையான சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றான WNPS எனப்படும் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம் அந்நாட்டின் தலைமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மே 16ம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவில் அதானி கிரீன் எனர்ஜி உடனான காற்றாலை திட்ட ஒப்பந்தத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து வெளிப்படையான தகவல்கள் அளிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இந்தியா – இலங்கை இடையேயான கூட்டுத் திட்டம் என சித்தரிக்கப்பட்டாலும் இந்திய அரசின் பங்களிப்புகள், மானியங்கள் அல்லது கடன்கள் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மன்னார் பகுதியின் தனித்துவமான பல்லுயிர் பெருக்கம், புலம் பெயரும் உயிரினங்கள் மற்றும் இலங்கையின் பசுமை சூழலுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதால் அதானியின் காற்றாலை திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் WNPS அமைப்பு முறையிட்டுள்ளது. இந்த மனு விரைவில் இலங்கை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

The post சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் காற்றாலை திட்டம் : அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு!! appeared first on Dinakaran.

Tags : Adani ,Supreme Court of Sri Lanka ,Colombo ,Sri Lanka ,MANNAR ,POONERIN ,NORTHEASTERN REGION OF SRI LANKA ,Dinakaran ,
× RELATED தென்னிந்திய சிமெண்ட் விற்பனையில்...