×

பிச்சைக்காரன்பள்ளம் ஓடையில் சாயக் கழிவுநீர் கலக்கும் அவலம்

* பொதுமக்கள் அதிர்ச்சி

ஈரோடு : ஈரோடு பிச்சைக்காரன்பள்ளம் ஓடையில் சாயக்கழிவுநீர் கலப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் சாய, சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து முறையாக சுத்திகரிப்பு செய்யப்படுகிறதா என்பது குறித்து கலெக்டர் கதிரவன் உத்தரவின்பேரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று ஈரோடு பிச்சைக்காரன்பள்ளம் ஓடையில் சிகப்பு மற்றும் நீலநிறத்தில் சாயக்கழிவுநீர் ஓடியது. இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பிச்சைக்காரன்பள்ளம் ஓடையில் பெரியஅக்ரஹாரம் எதிரே செயல்பட்டு வரும் ஆலைகள் கழிவுநீரை குழாய் அமைத்து அதன் மூலமமாக வெளியேற்றி வருவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் மலையாண்டி கூறுகையில்,`ஈரோடு பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆலைகள் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றி வருகிறார்களா என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறோம்.

கலெக்டர் தலைமையிலான மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தொடர்ந்து கண்காணித்து சாயக்கழிவுநீரை வெளியேற்றும் ஆலைகளின் மின் இணைப்புகளை துண்டித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். பிச்சைக்காரன்பள்ளம் ஓடையில் சாயக்கழிவுநீர் வெளியேற்றப்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும். எந்த ஆலைகளில் இருந்து கழிவுநீர் திறந்து விட்டுள்ளனர் என்பது குறித்து கண்டறிந்து அந்த ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்சாலைகள் கட்டாயமாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய வேண்டும். சுத்திகரிப்பு செய்யாமல் இதுபோன்ற சாயக்கழிவுநீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : erode,Sewage water,pichakaran pallam
× RELATED தென்காசி பகுதியில் கனமழையால் குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு!