×

2014 நாடாளுமன்ற தேர்தலைவிட 2 சதவீதம் வாக்குப்பதிவு குறைவு: கோட்டை விட்ட தேர்தல் ஆணையம்

சென்னை: 2014 நாடாளுமன்ற தேர்தலை விட 2019 நாடாளுமன்ற தேர்தலில் சுமார் 2 சதவீதம் வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் மாதிரி வாக்குசாவடிகள் அமைத்தது, விவிபேட் கருவியை அறிமுகப்படுத்தியது என பல்வேறு வழிகளில் வாக்குப்பதிவில் புது முயற்சிகளை தேர்தல் ஆணையம் கையாண்டது. வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி திரைப்பட நட்சத்திரங்கள், பிரபலங்கள் மூலம் தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு விளம்பரம் வெளியிட்டது. அதுதவிர பல்வேறு வழிகளில் வாக்களிப்போரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான, விழிப்புணர்வு ஏற்படுத்தியது.

அதனடிப்படையில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் முந்தைய தேர்தலை விட கூடுதல் வாக்குகள் பதிவாகியிருக்க வேண்டும். 2014ம் ஆண்டு தமிழகத்திலுள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் 73.68 சதவீதம் வாக்குகள் பதிவானது. 2019ம் ஆண்டில் 71.90 சதவீத வாக்குகள் மட்டுமே  பதிவாகியுள்ளது. அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா நடந்த மதுரையில் கடந்த முறையை விட இம்முறை வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது. 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 67.88 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இம்முறை 65.83 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. சென்னையில் தமிழகத்தின் பிற பகுதிகளை விட குறைவாகவே வாக்கு பதிவாகும் என்று பரவலாக கூறப்பட்டது.

2014 நாடாளுமன்ற தேர்தலில் சென்னை நகரில் வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய தொகுதிகளில் 61.83 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 2019 தேர்தலில் 59.71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இரண்டும் ஒட்டுமொத்த சராசரியை விட குறைவு. தேர்தல் நடைபெறும் நாட்களில் திருவிழா காலங்களில் இயக்கப்படுவது போல், ஏராளமான பஸ்கள் இயக்க வேண்டும். அப்போது தான் வெளியூரில் தங்கி பணிபுரிவோர் ஓட்டுப்போட முடியும். பணி நிமித்தமாக வெளி மாநிலங்கள், வெளிநாட்டில் வசிப்பவர்கள்  தங்களின் வாக்குரிமையை செலுத்த தேர்தல் ஆணையம் வசதிகளை ஏற்படுத்தி இருக்க வேண்டும்  என்பது பலரின் கோரிக்கையாக உள்ளது.  இதன்மூலம் வாக்கு பதிவு சதவீதம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

2014,2019 தேர்தலில் ஒற்றுமை

2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிகபட்சமாக தர்மபுரியில் 81.14 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்த தேர்தலும் தர்மபுரியில் அதிகபட்சமாக 80.49 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தபட்சமாக தென் சென்னை தொகுதியில் 60.37 சதவீத வாக்குகள் பதிவானது. 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் தென்சென்னையில் குறைந்தபட்சமாக 56.41 சதவீதம் வாக்குபதிவாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : election ,Fortress ,Election Commission , 2014 Parliament, Election, 2 percent, Voting, Decreasing, Election Commission
× RELATED மக்களவைத் தேர்தலை ஒட்டி ரூ.9,000 கோடி...