×

மகள் திருமணத்திற்கு 6 மாதம் பரோல் கேட்டு நளினி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மகள் திருமணத்திற்கு 6 மாதம் பரோல் கேட்ட நளினி மனுவை விசாரித்து ஜூன் 11-க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக பரோல் தேவை என்றால் விடுமுறைகால அமர்வை அணுகி நிவாரணம் பெறலாம் என நளினிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, லண்டனில் வசிக்கும் தன் மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 6 மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமனறத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், கடந்த 2000ம் ஆண்டு தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அதன் பின்னர் இதுவரை 10 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த 3,700 ஆயுள் தண்டனை கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்துள்ளது என மனுவில் சுட்டிக்காட்டி உள்ளார்.

ஆயுள் கைதிகளுக்கு 2 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு மாதம் பரோல் வழங்க சிறை விதிகள் வழிவகை செய்துள்ள போதிலும், 27 ஆண்டுகளாக தனக்கு ஒரு பரோல் கூட வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பரோல் கேட்டு கொடுக்கப்பட்ட மனு மீது, வேலூர் சிறை நிர்வாகம் பரிசீலனை செய்யவில்லை எனவும், எனவே இந்த மனு விசாரணைக்கு வரும் போது, வழக்கறிஞர் இல்லாமல் தாமே வாதாட அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இதையடுத்து இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நளினி தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்ற நீதிபதிகள், இது தொடர்பாக ஜூன் 11ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், அவரசமாக பரோல் தேவை என்றால் விடுமுறை கால நீதிமன்றத்தை அணுக உயர்நீதிமன்றம் நளினிக்கு அனுமதி அளித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nalini , Nalini, Parole, Manu, Tamilnadu Government, HC
× RELATED ராஜிவ்காந்தி கொலை வழக்கில்...