×

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் குண்டாஸ் அறிவுரை கழகத்தில் ஆஜர்

சென்னை: பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் குண்டாஸ் அறிவுரை கழகத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பொள்ளாச்சியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை, காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி, ஆபாச வீடியோ எடுத்ததாக புகார் எழுந்தது. அதன்படி பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், சபரிராஜன் என்ற 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆனால் இவர்கள், இதுபோன்று பல பெண்களுக்கு காதல் வலைவீசி அவர்களை ஏமாற்றி வீடியோ எடுத்துள்ளனர். மேலும், அவர்களை வைத்து பணம் சம்பாதித்ததாகவும், 4 பேருடன் பல முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. பல வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி மக்கள் மனதில் பெரும் பதற்றத்தையும், பெண்களை பெற்ற பெற்றோர்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதையடுத்து அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், மகளிர் அமைப்பினர் என பலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால் தமிழக அரசு வழக்கை உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியது. மேலும் சிபிஐ விசாரணைக்கும் பரிந்துரை செய்தது. ஆனால் தற்போது சிபிசிஐடி தான் விசாரித்து வருகிறது. பின்னர் 4 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், குண்டர் தடுப்பு சட்டத்தீன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்கள், சரியாக கைது செய்யப்பட்டுள்ளனரா, அவர்கள் தவறு செய்துள்ளனரா என்பது குறித்து விசாரிக்க, சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு 4 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, இந்த வழக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய வழக்கு என்பதால், பொதுமக்கள் யாரேனும் குவிந்து ஏதேனும் தாக்குதலில் ஈடுபட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்தில், வளாகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பின்னர் அழைத்து வரப்பட்ட திருநாவுக்கரசுடன் அவரது தாய், வசந்தகுமாருடன் அவரது தந்தை, சதீஷுடன் அவரது மனைவி, சபரிராஜனுடன் அவரது தாய் ஆகியோர், ஒருவர் ஒருவராக, அறிவுரை கழக தலைவர் ராமன், உறுப்பினர்கள் மாசிலாமணி, ரகுபதி ஆகியோர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது நீதிபதிகள் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். இதேபோல், வழக்கு பதிவு செய்த போலீசாரிடமும் விசாரணை நடத்தினர். ஒவ்வொருவரிடமும் சுமார் 10 நிமிடங்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் விசாரணை முடிந்து அனைவரும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த விசாரணை குறித்த அறிக்கையை நீதிபதிகள் தமிழக உள்துறை செயலாளருக்கு அனுப்பி வைப்பார்கள். அதனை வைத்து குண்டாஸ் ரத்து செய்வதா, நீடிப்பதா என்பதை அரசு முடிவெடுக்கும். நீதிமன்ற பணியாளர்கள், கலெக்டர் அலுவலக பணியார்கள் என பலர் குற்றவாளிகளை பார்ப்பதற்காக குவிந்திருந்தனர். இதனால் அந்த பகுதி சற்று பரபரப்பாக காணப்பட்டது.

அறிவுரை கழகம் என்றால் என்ன?

பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்படுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் தொடரப்படுகிறது. இந்த தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் ஓராண்டு சிறையில் இருந்து வெளியே வர முடியாது. எனவே இப்படி கைது செய்யப்படுபவர்கள் சரியாக கைது செய்யப்பட்டுள்ளனரா, அதிகாரிகள் தவறு செய்துள்ளனரா என்பதை தெரிந்துகொள்ள உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் இயங்கி வருவதுதான் அறிவுரை கழகம். மேலும் இதில் தேசிய பாதுகாப்பு தடுப்பு சட்டதின் கீழ் கைது செய்யப்படுபவர்களிடமும் விசாரணை நடத்தப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : persons ,Thirunavukarasu ,Pollachi , Pollachi issue, arrested, sexual intercourse, Thirunavukarasu,
× RELATED சென்னையில் ரயில் பயணிகளிடம் தொடர் திருட்டு: 2 பேர் மீது குண்டாஸ்