×

அம்பரீஷின் அரசியல் வாரிசு பராக்!

ஸ்டார் வார்ஸ் பகுதியில் இன்று நாம் பார்க்கப்போவது தென்னிந்திய சினிமாவை ஒரு சமயத்தில் கலக்கிய சுமலதா. சென்னையில் பிறந்த சுமலதா, ஆந்திராவில் 1979ல் நடந்த அழகிப்போட்டியில் வென்றார். அதுதான் அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. உடனே தயாரிப்பாளர் ராமநாயுடு முன்பணமாக ரூ.1,001ஐ கொடுத்து தனது படத்துக்கு ஒப்பந்தம் செய்தார். உடனடியாக அந்த படம் துவங்கவில்லை. சுமலதாவை கோலிவுட் கவ்விக் கொண்டது. 1979ல் வெளியான திசை மாறிய பறவைகள் படத்தில் அவர் அறிமுகமானார். அடுத்த படமே யாரும் எதிர்பாராத வகையில் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாருடன். தெலுங்கில் சமஜானிகி சவால், மலையாளத்தில் மூர்க்கன் என ஒரே சமயத்தில் தென்னிந்திய சினிமாவில் 4 மொழியிலும் நடித்து பிரபலம் ஆனார் சுமலதா.
 இவரது வளர்ச்சியைக் கண்டு அப்போதிருந்த எல்லா நடிகைகளும் கதி கலங்கிப்போயினர். தென்னிந்தியாவில் பிரபலமாகிக் கொண்டிருந்த சமயத்தில் இந்தியிலும் நடித்து அசத்தினார். தமிழில் ரஜினியுடன் முரட்டுக் காளை, கழுகு படங்களில் நடித்தார். கன்னடத்தில் அம்பரீஷுடன் ஆஹுதி படத்தில் நடித்தார். பிறகு நியூ டெல்லி படத்தில் நடித்தபோது காதலாகி இருவரும் டிசம்பர் 8ம் தேதி, 1991ல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களது மகன் அபிஷேக் கவுடா நடிகராக இருக்கிறார்.

1994ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அம்பரீஷ், 1996ல் மக்களவை தேர்தலில் சீட் மறுக்கப்பட்டதால் ஜனதா தளத்தில் இணைந்தார். 1998ல் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பின்னர் மீண்டும் காங்கிரஸில் இணைந்த அம்பரீஷ், தொடர்ந்து 5 முறை தேர்தலில் போட்டியிட்டார். கடந்த ஆண்டு நவம்பர் 24ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸில் தனக்கு சீட் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடு இருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை. மாண்டியா தொகுதியை கூட்டணியில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு காங்கிரஸ் ஒதுக்கியது. இப்போது அந்த கட்சி சார்பில் போட்டியிடப்போவது நிகில் குமாரசாமி. முதல்வர் குமாரசாமியின் மகனும் கன்னட ஹீரோவுமான இவர் களத்தில் குதித்திருக்கிறார்.
இது சுமலதாவுக்கு பேரதிர்ச்சியாக அமைய, ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டவர் அதிரடியாக முடிவெடுத்து சுயேச்சையாக மாண்டியாவில் போட்டியிட முடிவு செய்துவிட்டார். ‘நடிகர் நிகிலை எதிர்த்து நடிகை சுமலதா போட்டியிடவில்லை. முதல்வரின் மகனை எதிர்த்து எங்கள் தலைவர் அம்பரீஷின் அரசியல் வாரிசு போட்டியிடுகிறார்’ என சுமலதாவின் ஆதரவாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனால் மாண்டியா தொகுதியில் பரபரப்பு ஏற்பட, சுமலதாவுக்கு ஆதரவு தெரிவித்து பாஜ வேட்பாளரை நிறுத்தவில்லை. இது சுமலதாவுக்கு பெரும் பலமாக அமையும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். முதல்வரின் மகனை சுமலதா தோற்கடிப்பாரா என்பது இந்த தேர்தலில் தெரிந்துவிடும்.

களத்தில் குதித்த ஸ்டார்ஸ்
கன்னட திரைப்பட சூப்பர் ஸ்டார்கள் தர்ஷன் மற்றும் யஷ் (கேஜிஎஃப் பட ஹீரோ) ஆகியோர் சுமலதாவுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பாஜவின் முயற்சியாலேயே இவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்  மண்டியா மாவட்டம் நாகமங்கலா தாலுகாவில் நடிகர் தர்ஷன் திறந்த வாகனத்தில்  சென்று நேற்று சுமலதாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவரிடம்  அங்கிருந்தவர்கள், ‘தர்ஷன்... நீங்கள் எங்களுக்காக ஒரு பாட்டு பாட  வேண்டும்’ என்றனர். உடனே தர்ஷன், ‘முதலில் சுமலதாவை நீங்கள்  வெற்றி பெறச் செய்யுங்கள். அதன்பிறகு பாட்டு என்ன... உங்களுடன் டூயட்  பாடி நடனமே ஆட தயாராக இருக்கிறேன்’ என்று சிரித்தபடியே கூறினார். அதைக்கேட்டு அங்கிருந்தவர்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Barak ,Ambrose , Ambrose's political, successor, Barak!
× RELATED பராக் – சாம்சன் அதிரடி வீண்; ராயல்சை வீழ்த்தியது குஜராத்