×

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த விவகாரம் அரசியல் லாபத்திற்காக குற்றச்சாட்டு

* ஆணையம் வழக்கில் அப்போலோ வாதம்
* தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த விஷயத்தில் அப்போலோ மருத்துவமனை மீது நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் குற்றம் சாட்டுவது அரசியல் காரணத்திற்காகத்தான் என்று அப்போலோ மருத்துவமனை சார்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை விதிக்க கோரியும், வழக்கு விசாரணைக்கு தங்கள் மருத்துவமனை மருத்துவர்கள் ஆஜராக விலக்கு அளிக்க கோரியும் அப்போலோ மருத்துவமனை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்போலோ தரப்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, விசாரணை ஆணையம் என்பது பிரச்னையின் உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டுமே தவிர தீர்ப்பிட முடியாது. மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்களிடம் வாக்குமூலம், ஆவணங்களை, சாட்சியங்களை பெற்று அதன் அடிப்படையில் அரசுக்கு பரிந்துரை மட்டுமே செய்ய முடியும்.
ஆனால், ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில் அப்போலோ மருத்துவனை மீது நேரடியாக குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது. சுதந்திர இந்தியாவில் அரசியல் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிப்பது இதுதான் முதன்முறை.

 அப்போலோ மருத்துவமனை தவறான சிகிச்சை அளித்துள்ளது என்றும், அரசுத் தரப்பு மருத்துவர்களின் ஆலோசனையை மருத்துவமனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் ஆணையத்தின் வக்கீல் எப்படி கூறலாம். அரசியல் காரணத்திற்காகத்தான் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை ஆணையம் வைத்துள்ளது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து ஆய்வு செய்ய ஆணையம் ரகசியமாக 4 மருத்துவர்கள் கொண்ட மருத்துவக் குழுவை அமைத்துள்ளது. அதில் ஒருவர் பயோ கெமிஸ்ட்ரி நிபுணர். அரசு மருத்துவர்கள் குழு ஆணையம் சேகரிக்கும் மருத்துவ ஆவணங்களை கண்காணிக்கும் பொறுப்புக்காக மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களை சிகிச்சை அளிக்க அனுமதிக்கவில்லை என்று எப்படி கூற முடியும். இருந்தபோதிலும் அரசு மருத்துவர்கள் சிகிச்சை குறித்து எதிரான எந்த அறிக்கையையும் தரவில்லை.

ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன என்பதே உண்மை என்று வாதிட்டார். இதற்கு ஆணைய தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதிடும்போது, 90 சதவீத விசாரணை முடிந்துவிட்டது. மருத்துவக் குழுவை அமைக்கும் மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்தது ஆணையத்தின் தனிப்பட்ட முடிவாகும் என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். சுதந்திர இந்தியாவில் அரசியல் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிப்பது இதுதான் முதன்முறை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jayalalithaa ,gain , Jayalalitha, political, apollo
× RELATED இடைத்தேர்தல் புறக்கணிப்பு சரியல்ல...