×

உடற்கூறு பரிசோதனையில்லாமல் அடையாள அட்டை வேண்டும் திருநங்கைகளுக்கு 2 சதவீத இடஒதுக்கீடு கேட்டு வழக்கு

சென்னை: திருநங்கைகள், திருநம்பிகளுக்கு 2 சதவீத இடஒதுக்கீடும், உடற்கூறு பரிசோதனை செய்யாமல் அடையாள அட்டையும் வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை அமைந்தகரையை சேர்ந்த திருநங்கை கிரேஸ் பானு கணேசன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் திருநங்கைகள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால், இந்த பிரிவினருடன் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக நல்ஷா என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் திருநங்கைகள், திருநம்பிகள் ஆகியோருக்கு கல்வி, வேலைவாய்ப்பில்  இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசும், திருநங்கைகள், திருநம்பிகள் உரிமைகள் சட்ட மசோதாவை உருவாக்கியது. அதில், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், 2 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று  கூறியிருந்தது.
இந்த சட்டமசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, கடந்த 2018ல் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் ஏற்கனவே, திருநங்கை, திருநம்பிகளுக்கு 2 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு விட்டது. ஆனால், தமிழகத்தில் இதுபோல தனி இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. எனவே, கல்வி, வேலைவாய்ப்பில் திருநங்கை, திருநம்பிகளுக்கு 2 சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும். மேலும், உடற்கூறு பரிசோதனை இல்லாமல், திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு அடையாள அட்டை வழங்க தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் பெங்களூர் மூத்த வக்கீல் ஜெயனா கோத்தாரி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு வரும் 21ம் தேதி பதில் தருமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : transgender , Case for hearing 2% reservation, transgender ,identity card
× RELATED சென்னை அடையாறில் வங்கதேச நாட்டைச்...