×

போராட்டம் நியாயம் என ஒப்புக்கொண்டுள்ள நிலையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை ஒடுக்குவது எந்த விதத்தில் நியாயம்?: அரசுக்கு ராமதாஸ் கேள்வி

சென்னை: நிதி நெருக்கடியால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை என்று நிதியமைச்சர் கூறியுள்ளார். ஆனால் அவர் போராட்டத்தை நியாயமற்றது என்று கூறவில்லை. இந்நிலையில்  ஜாக்டோ-ஜியோவினரின் போராட்டத்தை ஒடுக்குவது எந்த விதத்தில் நியாயம் என்று அரசுக்கு ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: அரசு ஊழியர்களும்,  போராட்டத்தை முன்னெடுத்து நடத்தும் ஜாக்டோ-ஜியோ சங்கத் தலைவர்களை கைது செய்வது, 17-பி குறிப்பாணை வழங்குவது உள்ளிட்ட செயல்களில் அரசு ஈடுபட்டிருக்கிறது. இது வேலைநிறுத்தம் தீவிரமடையவும், சட்டம் -  ஒழுங்கு சிக்கல் ஏற்படவும் வழி வகுக்குமே தவிர, வேறு எந்த வகையான பயனையும் ஏற்படுத்தாது.ஆட்சியாளர்களும், அரசு ஊழியர்களும் வேறு வேறல்ல. அவர்கள் இருவருமே அரசு நிர்வாகத்தின் அங்கங்கள் தான். ஒரு  தரப்பினர் கொள்கை வகுப்பாளர்கள் என்றால், மற்றொரு தரப்பினர் வகுக்கப்பட்ட கொள்கைகளை செயல்படுத்துபவர்கள் ஆவர்.

இவர்கள் இருவரும் தண்டவாளத்தைப் போன்று பயணிக்க வேண்டுமே தவிர, விலகவோ, நெருங்கவோ கூடாது. அவ்வாறு செய்தால் அது அரசாங்க இயந்திரம் எனப்படும் தொடர்வண்டி கவிழ்வதற்கே வழிவகுக்கும் என்பதை  இருவரும் உணர வேண்டும்.இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டம் நியாயமற்றது என்று எந்த இடத்திலும் ஆட்சியாளர்கள் கூறவில்லை. மாறாக,  ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதி அரசிடம் இல்லை என்றும், நிதி நெருக்கடி காரணமாகவே கோரிக்கைகளை ஏற்க முடியவில்லை என்றும் தான் அமைச்சர்  ஜெயக்குமார் மீண்டும், மீண்டும் கூறி வருகிறார். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளில் நியாயம் இருப்பதை ஆட்சியாளர்களே ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில், நியாயமான கோரிக்கைகளுக்காக  போராடுபவர்களை அரசு ஒடுக்குவது எந்த வகையில் நியாயமாக இருக்கும்?

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தால் அப்பாவி பொதுமக்களும், அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  எனவே, இந்தப் போராட்டத்தை விரைவாக  முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. அதன்படி, இதுவரை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள், வழங்கப்பட்ட 17-பி குறிப்பாணைகள் ஆகியவற்றை தமிழக அரசு  திரும்பப்பெற வேண்டும். கைது நடவடிக்கைகளை கைவிட வேண்டும். இத்தகைய நல்லெண்ண நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகு, ஆசிரியர்கள்  உள்ளிட்ட அரசு ஊழியர்களை திறந்த மனதுடன் அழைத்துப் பேச வேண்டும்.  இரு தரப்பினரும் இயன்றவரை நெகிழ்வுத் தன்மையுடன் நடந்து கொண்டு வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : The struggle is justice, the jakō-ji system, the government, the Ramadas
× RELATED திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி...