×

ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் - இன்று முதல் கடலுக்கு செல்கின்றனர்

ராமேஸ்வரம்: கடலில் மூழ்கி பலியான மீனவர் உடல் சொந்த ஊருக்கு வந்ததை தொடர்ந்து, ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர். இன்று முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர். ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 12ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களின் படகுகள் மீது, இலங்கை கடற்படை கப்பல் மோதியது. இதில் ஒரு படகு கடலில் மூழ்கியது. படகில் இருந்து கடலில் குதித்த 4 பேரில், ராமேஸ்வரம் அருகே இலந்தைக்கூட்டத்தை சேர்ந்த மீனவர் முனியசாமி  கடலில் மூழ்கி பலியானார். இவரது உடல் யாழ்ப்பாணம் கடல் பகுதியில் கடற்படையினரால் மீட்கப்பட்டது. கடலில் தத்தளித்த 3 பேர் உட்பட 19 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.

சிறை பிடிக்கப்பட்ட 19 மீனவர்களை விடுவிக்க கோரியும், கடலில் மூழ்கிய மீனவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வலியுறுத்தியும், இலங்கை கடற்படை அத்துமீறலை கண்டித்தும் ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 5 நாட்களாக தொடர் வேலை நிறுத்தம் செய்து வந்தனர். இதனால் 800க்கும் மேற்பட்ட படகுகள் கரை நிறுத்தப்பட்டிருந்தன.

இதனிடையே, மீனவர் முனியசாமி உடல் நேற்று இலங்கையிலிருந்து விமானம் மூலம் தமிழகம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அவரது சொந்த ஊரான இலந்தைக்கூட்டம் கிராமத்தில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் முனியசாமியின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இதையடுத்து ராமேஸ்வரம் கடற்கரையில் மீனவர் பிரதிநிதிகளின் அவசர ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், பலியான மீனவரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாலும், ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டதாலும் ஸ்டிரைக்கை வாபஸ் பெற்று மீண்டும் கடலுக்கு செல்வது என முடிவு செய்யப்பட்டது. வேலை நிறுத்தம் வாபசானதை தொடர்ந்து இன்று (ஜன.19) முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்.

மீனவர் உடலை கண்டுஉறவினர்கள் கதறல்

மீனவர் முனியசாமியின் உடல் யாழ்ப்பாணத்தில் இருந்து, இந்திய தூதரக அதிகாரிகளின் உதவியுடன் நேற்று காலை 11 மணியளவில் விமானம் முலம் திருச்சி வந்தது. விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திருச்சி கலெக்டர் ராஜாமணி ஆகியோர் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.பின்னர் ஆம்புலன்ஸ் மூலமாக மீனவரின் உடல் அவரது சொந்த ஊரான இலந்தைகூட்டம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. முனியசாமியின் உடலுக்கு ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ், மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் மதியம் 3 மணியளவில் அவரது உடல் கிராம மயானத்தில் எரியூட்டப்பட்டது. இறந்த முனியசாமிக்கு முருகேஸ்வரி, சண்முகப்பிரியா என 2 மகள்கள் உள்ளனர். மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். முனியசாமி குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதி ரூ.5 லட்சம், மீனவர் கூட்டுறவு சங்க உயிரிழப்பு காப்பீட்டு தொகை ரூ.2 லட்சம், மீனவர் நல வாரியம் மூலம் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fishermen ,Rameswaram ,sea , Rameswaram fishermen, strike, withdraw
× RELATED இலங்கைக்கு படகில் கடத்திய ரூ.400 கோடி...