×

ஆதார் நடைமுறையால் அரசுக்கு 90,000 கோடி மானியம் மிச்சம்: ஜெட்லி தகவல்

புதுடெல்லி: ஆதார் எண் மூலம் நலத்திட்ட பலன்கள் வழங்கியதை நடைமுறைப்படுத்தியதால் மத்திய அரசுக்கு கடந்த மார்ச் வரை மட்டும், ஆயுஷ்மான் பாரத் போன்று 3 திட்டங்களை செயல்படுத்தும் அளவுக்கு ₹90,000  கோடி மானியம் மிச்சம் ஆனது என மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார். நலத்திட்டங்களை பெற ஆதாரை மத்திய அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட பலன்கள் குறித்து, மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: ஆதார் மூலம் நலத்திட்ட நிதியை நடைமுறைப்படுத்தியது, மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பல்வேறு பெயர்களில் போலியாக பலன் பெற்றவர்கள், இல்லாதவர்கள் பெயரில் பெற்ற பலன்கள்,  மோசடிகள் ஒழிக்கப்பட்டு விட்டன. இதனால் மத்திய அரசுக்கு கடந்த மார்ச் மாதம் வரையிலான சில ஆண்டுகளில் மட்டும் சுமார் ₹90,000 கோடி மானியத்தொகை மிச்சம் ஆகியுள்ளது.

 பல கோடி ஏழைகளுக்கு இலவச மருத்துவ வசதி அளிக்க ஆயுஷ்மான் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. ஆதார் மூலம் மிச்சப்படுத்திய தொகையில் இதுபோன்ற 3 பெரிய திட்டங்களுக்கு நிதி அளிக்க முடியும்.ஆயுஷ்மான் திட்டம் மூலம் ஏழை குடும்பத்துக்கு ஆண்டுக்கு ₹5 லட்சத்துக்கு இலவச சிகிச்சை பெற முடியும். இதில் 10.74 கோடிக்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்கள் பலன் அடைந்துள்ளன. இந்த திட்டம் கடந்த ஆண்டு  செப்டம்பரில் துவக்கப்பட்டது. இதுவரை 7 லட்சம் ஏழை நோயாளிகளுக்கு மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.  ஆதார் நடைமுறை மூலம் இந்தியாவுக்கு ஆண்டுக்கு சராசரியாக ₹77,000 கோடி மிச்சமாகும் என உலக வங்கி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.  அந்த அளவுக்கு பெரிய மாற்றத்தை ஆதார் நடைமுறை  ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ஆதார் மூலம் ₹1,69,868 கோடி மதிப்பிலான மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆதார் மூலம் இடைத்தரகர்கள் யாரும் இல்லாமல் மக்களுக்கு நேரடியாக பலன் சென்று சேர்கிறது. பஹல் மற்றும் உஜ்வாலா திட்டம் மூலம் 22.8 கோடி குடும்பங்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் காஸ் மானியம்  வழங்கப்படுகிறது. 58.24 கோடி குடும்ப அட்டைகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 10.33 கோடி பேருக்கு வங்கி கணக்கில் ஊதியம் வழங்கப்படுகிறது. 21 கோடி பான் எண்கள்  ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government , Aadhaar ,government, 90,000 crore, Jetley Information
× RELATED மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332...