×

தமிழகம் முழுவதும் விரைவில் அமல் டாஸ்மாக் விற்பனை பணம் கடைகளிலேயே நேரடியாக வசூல்

சென்னை: டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையில் வசூலாகும் பணத்தை நேரடியாக சென்று வங்கி பிரதிநிதிகளே பெற்று செல்லும் நடைமுறையை விரைவில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நிர்வாகம் அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 4,800க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. சென்னையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கடைகளில் விற்பனையாகும் பணத்தை ஊழியர்கள் நேரடியாக சென்று வங்கிகளில் செலுத்துவார்கள். இதனால், ஊழியர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவியது. பல இடங்களில் ஊழியர்களை தாக்கி பணத்தை கொள்ளையடித்து செல்லும் நிலை ஏற்பட்டது. எனவே, கடைகளில் வசூலாகும் பணத்தை வங்கி ஊழியர்களே நேரடியாக வந்து வசூல் செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், திருடு போன பணத்தின் மதிப்பு 10 கோடிக்கு மேல் மீட்கப்படாமல் உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், ஊருக்கு ஒதுக்குப்புறங்களில் உள்ள கடைகள், இருள் சூழ்ந்த பகுதிகளில் உள்ள கடைகள் என்று பாதுகாப்பு இல்லாதது என்று கண்டறியப்பட்ட 1,396 டாஸ்மாக் கடைகளில் வங்கி பிரதிநிதிகள் நேரடியாக சென்று அன்றாட விற்பனை தொகையை வசூல் செய்யும் நடைமுறையை டாஸ்மாக் நிர்வாகம் தற்போது கொண்டுவந்துள்ளது.
இந்த நடைமுறையின் மூலம் ஊழியர்கள் நேரடியாக சென்று பணத்தை வங்கிகளில் செலுத்த தேவையில்லை. குறிப்பிட்ட வங்கி பிரதிநிதிகளே கடை விற்பனை முடிந்தவுடன் நேரில் சென்று பணத்தை வசூல் செய்வார்கள். இந்த நடைமுறைக்கு டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் சங்கங்கள் மத்தியில் தற்போது வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும், இந்த நடைமுறையை அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை எழுந்தது.  ஊழியர்களின் கோரிக்கையை தொடர்ந்து இந்த நடைமுறையை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கொண்டு வரும் முயற்சியில் டாஸ்மாக் நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘பாதுகாப்பற்றதாக கண்டறியப்பட்ட 1,396 டாஸ்மாக் கடைகளில் வங்கி பிரதிநிதிகளே நேரடியாக சென்று பணத்தை வசூல் செய்யும் நடைமுறையை போன்று அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் வங்கி பிரதிநிதிகளே பணத்தை வசூல் செய்யும் நடைமுறையை கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக நிர்வாகத்தின் மூலம் டெண்டர் கோரப்படும். அடுத்த வருடம் இந்த நடைமுறையை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பணம் கொள்ளை போவது, வழிப்பறி போன்ற சம்பவங்கள் வெகுவாக குறையும்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Alam Tasmaq ,Tamilnadu ,shops , Tasmac , selling the money directly ,shops across Tamilnadu soon
× RELATED மீன்பிடிக்க நீர் நிலைகளில் தண்ணீர்...