களக்காடு: நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்யவில்லை. பொதுவாக டிசம்பர் மாதங்களில் கனமழை பெய்யாவிட்டாலும் வனப்பகுதியினுள் அவ்வப்போது சாரல் மழை பெய்யும். தற்போது சாரல் மழையும் பெய்யவில்லை. களக்காடு, திருக்குறுங்குடி மலைப்பகுதியிலும் மழை பெய்யவில்லை. இதையடுத்து திருக்குறுங்குடி நம்பியாற்றில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துள்ளது. திருக்குறுங்குடி மலையில் உள்ள பிரசித்திப் பெற்ற திருமலைநம்பி கோயிலுக்கு வரும் பக்தர்கள் நம்பியாற்றில் புனிதநீராடி நம்பியை தரிசிப்பது வழக்கம்.பொதுவாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் நம்பியாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்.
மலைக்கு சுற்றுலா வருபவர்களும், கோயிலுக்கு வரும் பக்தர்களும் மூலிகை கலந்து வரும் நம்பியாற்றில் உற்சாகமாக குளித்து மகிழ்வர். தற்போது நம்பியாற்றில் தண்ணீர் குறைந்ததால் சிரமத்துடனே குளிக்க வேண்டியதுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்தாண்டு வடகிழக்கு பருவமழை குறைந்தளவு பெய்ததே காரணம்.நாங்குநேரி, ராதாபுரம் வட்டார மக்களின் முக்கிய நீராதாரமான நம்பியாற்று பாசனத்தின் மூலம் இப்பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பயன்பெற்று வருகின்றன. தற்போது இப்பகுதி விவசாயிகள் பிசான சாகுபடிகளில் ஈடுபட்டுள்ளனர்.
குளங்களில் தண்ணீர் இருந்தாலும் அறுவடை நடைபெறும் வரை அதாவது வருகிற பிப்ரவரி, மார்ச் மாதங்கள் வரை பயிர்களுக்கு தண்ணீர் தேவைப்படும். இதனிடையே டிசம்பர் மாத துவக்கத்திலேயே நம்பியாற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது அறுவடை வரை பயிர்களுக்கு தண்ணீர் போதுமானதாக இருக்குமா? என்று விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் கடந்த சில வருடங்களாக பருவ மழை பெய்யும் என்ற நிலை மாறி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, புயல் வந்தால் மட்டுமே மழை கொட்டும் என்ற சூழல் நிலவுவது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
