×

கட்டண கொள்ளை ‘ஆம்னி’களுக்கு ‘செக்’ : குளிர்சாதன பேருந்துகள் கட்டணம் குறைப்பு

சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தால் இயக்கப்படும், குளிர்சாதன படுக்கை வசதி பஸ்கள், கிளாசிக், சாதாரண படுக்கை வசதி பஸ்களின் கட்டணம் நேற்று முன்தினம் இரவு முதல்  குறைக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக ஆம்னி பஸ்களை போல், இரண்டு விதமான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது பயணிகளிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் கட்டணக்கொள்ளையில் ஈடுபட்டு வந்த ‘ஆம்னி’ பஸ்களுக்கு ‘செக்’ வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 300 கி.மீ.,க்கு மேல் உள்ள பகுதிகளுக்கு பொதுமக்கள் எளிதாக பயணிக்கும் வகையில், எஸ்இடிசி (ஸ்டேட் எக்ஸ்பிரஸ் டிரான்ஸ்போர்ட் கார்பரேசன்) சார்பில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், கும்பகோணம், தஞ்சாவூர், காரைக்குடி, நாகப்பட்டிணம், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், புதுச்சேரி, திருப்பதி ஆகிய இடங்களில் டெப்போக்கள் உள்ளன.

இங்கிருந்து ‘கிளாசிக்’ (ஏசி அல்லாது டாய்லட் வசதி ெகாண்ட பஸ்), அல்ட்ரா டீலக்ஸ் (ஏசி அல்லாத பஸ்), ஏசி பஸ், ஏசி சீட்டர், ஏசி சிலிப்பர், ஏசி அல்லாத சிலிப்பர் ஆகிய பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களை தினசரி, 1 லட்சத்திற்கு மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.  
இவ்வாறு இயக்கப்படும் பஸ்களில், குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பஸ்களுக்கு, ஒரு கிலோமீட்டருக்கு, இரண்டு  ரூபாய் 25 பைசா நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும், சாதாரண படுக்கை வசதி கொண்ட பஸ்களுக்கு, 1.55 பைசா, கழிப்பிட வசதியுடன் கூடிய ‘கிளாசிக்’ பஸ்களுக்கு, 1.15 பைசாவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இது ஆம்னி பஸ்களின் கட்டணத்தை விட அதிகமாக இருந்தது. இதனால் பெரும்பாலான பயணிகள் பயன்படுத்துவதற்கு ஆர்வம் காட்டவில்லை. மேலும் பண்டிகை உள்ளிட்ட விஷேச நாட்களில் கூட, இந்த பேருந்துகளை மக்கள் பயண்படுத்துவதை தவிர்த்து வந்தனர்.

மாறாக ஆம்னி பஸ்களை நாடிச்சென்றனர். இதனால் தமிழக போக்குவரத்துத்துறைக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து ஒருசில பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களை அதிகாரிகள் நிறுத்தினர். மேலும் பயண கட்டணத்தை குறைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
அதேபோல் ‘ஆம்னி’களில் அடாவடியில் சிக்கும் ெபாதுமக்களும், அரசு பஸ்களின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையேற்று திங்கள் முதல் வியாழன் வரை கட்டணத்தை குறைத்தும், வெள்ளி முதல் ஞாயிறு வரை பழைய கட்டணத்தை வசூலிக்கவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டிருக்கிறார்.  அதன்படி வார நாட்களில் குளிர்சாதன படுக்கை பஸ்களுக்கு கி.மீக்கு முந்தைய கட்டணத்தில் இருந்து, 45 பைசா குறைத்து, 1.85 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

அதேபோல், சாதாரண படுக்கை வசதி கொண்ட பஸ்களுக்கு 20 பைசா குறைத்து, 1.35 பைசாவாகவும், கிளாசிக் பஸ்களுக்கு, 10 பைசா குறைத்து, ரூ.1.05 பைசாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் வார நாட்களில் மொத்த கிலோ மீட்டர் அடிப்படையில், ரூ.25 முதல் ரூ.350 வரை குறைக்கப்பட்டுள்ளது. இது, நேற்று முன்தினம் இரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. தற்போது குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பஸ்களில், சேலம் - சென்னைக்கு, ரூ.725ல் இருந்து ரூ.655 ஆகவும், கோவை - சென்னை, ரூ.1,080 - ரூ.975 ஆகவும், கோவை - பெங்களூரு ரூ.805 - ரூ.725 ஆகவும், சென்னை - மதுரை ரூ.975 - ரூ.880ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், சென்னை - தேனி ரூ.1,115 - ரூ.970 ஆகவும், சென்னை - திருநெல்வேலி ரூ.1,315 - ரூ.1,145ஆகவும், சென்னை - திருச்சி ரூ.705 - ரூ.635 ஆகவும், பெங்களூரு - நாகர்கோவில், ரூ.1,480 - ரூ.1,345ஆகவும், சென்னை - மைசூரு ரூ.1065 - ரூ.965 ஆகவும், சென்னை - பெங்களூரு ரூ.775 - ரூ.700 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ‘கிளாசிக்’, சாதாரண படுக்கை வசதி பஸ்களுக்கு, கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோடை நெருங்குவதால் வரவேற்பு அதிகரிக்கும்

கோடைகாலம் நெருங்கிவருகிறது. அப்போது பெரும்பாலான பயணிகள் ஏசி வசதி கொண்ட பஸ்களிலேயே செல்ல விரும்புவார்கள். அப்போது ‘ஆம்னி’ பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும். இதனால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தார்கள். இந்நிலையில் தற்போது அரசு பஸ்களில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதால், கோடைகாலங்களில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்முறையாக இருவகை கட்டணம்

தமிழகத்தில் இயக்கப்படும் ‘ஆம்னி’  பஸ்கள் சாதாரண நாட்களில், அரசு பஸ்களை விட குறைவான கட்டணத்திலும், விஷேச நாட்களில் கூடுதலான கட்டணத்திலும் பஸ்களை இயக்கி வந்தனர். இதனால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து, அவர்கள் வருமானத்தை ஈட்டினர். இதேபோல், அரசு பஸ்களில் இரு வகையான கட்டணத்தை அமல்படுத்த, அரசிடம் விடுத்த கோரிக்கை  நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால், விரைவு போக்குவரத்துக்கழக பஸ்களை, மக்கள்  பயன்படுத்துவது அதிகரிக்கும். வருவாயும் அதிகரிக்கும்.

மீண்டும் இயக்கப்படுமா?

ஆம்னி பஸ்களை விட, விரைவு போக்குவரத்துக்கழக,  குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பஸ்களின் கட்டணம் அதிகம் என்பதால், பயணிகளின் வருகை  குறைந்தது. இதனால், திருவனந்தபுரம் - பெங்களூரு, மார்த்தாண்டம் -  சென்னை உள்பட, நான்கு வழித்தடங்களில் இயக்கப்பட்ட, குளிர்சாதன படுக்கை வசதி  பஸ்களின் இயக்கம் நிறுத்தப்பட்டது. கட்டண குறைப்பு அமலானதால் அந்த பஸ்கள்  மீண்டும் இயக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Government QuickBooks, Refrigerator Bedding Facilities, Fee Reduction, Amni Buses
× RELATED சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!