சண்டிகர்: காலிஸ்தான் ஆதரவாளர் கோபால் சிங் சாவ்லாவுடன் பஞ்சாப் அமைச்சர் சித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருவதால் சர்ச்சை எழுந்துள்ளது. பாகிஸ்தானின் ராவி ஆற்றங்கரையில் உள்ள கர்தாபூர் குருநானக் குருத்துவாராவுக்கு இந்தியாவில் இருந்து சாலை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் கர்தாபூரில் நடைபெற்றது. இதில், அந்த நாட்டு பிரதமர் இம்ரான்கான் பங்கேற்றார். இந்த விழாவில் கலந்து கொண்ட பஞ்சாப் மாநில அமைச்சர் சித்து, காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளரும், பாகிஸ்தான் சீக்கிய குருத்துவாரா பிரபந்த கமிட்டி பொதுச்செயலாளருமான கோபால் சிங் சாவ்லாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிரோமணி அகாலிதள் தலைவர் சுக்பீர் பாதல் கூறுகையில், ‘‘கடந்த 18ம் தேதி சித்துவின் தொகுதியான அமிர்தசரசில் உள்ள நிரங்கரி பவனில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் கோபால் சாவ்லாவுக்கு தொடர்புள்ளதாக கூறப்படும் நிலையில் சித்து அவருடன் கைகுலுக்கி புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். எனவே, சித்துவுக்கு இந்தியா முக்கியமா அல்லது வேறு எதற்கும் அவர் முக்கியத்துவம் தருகிறாரா என்பதை விளக்க வேண்டும்’’ என்றார்.
சாவ்லாவை தெரியாது
காலிஸ்தான் ஆதரவாளர் கோபால் சிங் சாவ்லாவுடன் பாகிஸ்தானில் சித்து புகைப்படம் எடுத்துகொண்டதற்கு பாஜ, அகாலிதளம் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பிய சித்து, நேற்று கூறுகையில், `‘பாகிஸ்தானில் அன்பு மழையில் நனைந்தேன். ஒவ்வொரு நாளும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான புகைப்படங்கள் அங்கு எடுக்கப்பட்டன. அதில் சாவ்லா யார்? சீமா யார் என்பது எனக்கு தெரியாது’’ என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி